சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு விறுவிறுவென்று முன்பதிவு

சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு விறுவிறுவென்று முன்பதிவு

2 mins read
2e7be00c-0ca7-47b4-bf0c-fea3348ae45a
படம்: இணையம் -
Google News Preferred Icon

வெள்ளிக்கிழமை (செப் 30) வெளியாகும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் சிங்கப்பூர் திரையரங்குகளில் மளமளவென்று முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கோல்டன் மைல் காம்பிளக்ஸில் உள்ள கார்னிவல் திரையரங்கில் நாளை முதல் காட்சி காலை 6.30 திரையிடப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி அந்தக் காட்சிக்கான கிட்டத்தட்ட 70% நுழைவுச்சீட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன.

தமிழ் முரசு இங்குள்ள மற்ற திரையரங்கு இணையத்தளங்களைப் பார்த்தபோது, பிரபலமான திரையரங்குகளில் மாலை, இரவுக் காட்சிகள் வேகமாக விற்று வந்தைக் காண முடிந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு வெள்ளிக்கிழமை அன்று கேத்தேயின் காஸ்வே பாய்ண்ட் திரையரங்கில் 19 காட்சிகளும் ஜெம் திரையரங்கில் 28 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெம் திரையரங்கில் 7.30 மணி காட்சிக்கு சொற்ப இடங்களே எஞ்சி உள்ளன.

கேத்தேயின் அங் மோ கியோ திரையரங்கில் அன்று 15 காட்சிகள் உள்ளன. இரவு 8.10 மணி காட்சிக்கு அங்கும் இங்கும் சில நுழைவுச்சீட்டுகள் உள்ளன.

கோல்டன் வில்லேஜ் நிறுவனத்தின் சிட்டி ஸ்குவேர், ஜூரோங் பாய்ண்ட், யீசூன் திரையரங்குகளில் இரவு 7 மணி முதல் 10.15 வரையிலான காட்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் வேகமாக விற்று முடிந்து வருவதாக இணையத்தளம் காட்டுகிறது.

ஷா தியேட்டர்ஸ் வாட்டவர்வே ஐமேக்ஸ் திரையரங்கில் இரவு எட்டரை மணிக்கு கிட்டத்தட்ட எல்லா நுழைவுச் சீட்டுகளும் விற்று முடிந்து விட்டன.

முதல் மூன்று வரிசைகளில் மட்டும் நுழைவுச்சீட்டுகள் எஞ்சி இருந்தன.

நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள ஷா திரையரங்கிலும் 8.40 மணி காட்சியும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது.

ஜூரோங்கில் உள்ள ஜேகியூப் திரையரங்கத்தில் சனிக்கிழமை இரவு 9 மணி காட்சியும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளது.

சில இடங்களில் சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளும் தீர்ந்து போகும் நிலையில் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் திரைப்படத்தைக் காண நுழைவுச்சீட்டுகளை வியாழக்கிழமை அன்றே வாங்கிவிட்ட கே. தினேஷ், தமது பெற்றோரை அழைத்துச் செல்லவிருக்கிறார்.

"பொதுவாக என் பெற்றோர் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தில் தமிழர்களின் வரலாறு இடம்பெறுவதால் அதை அவர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களும் உடனே ஆர்வம் காட்டினர்," என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்