உக்ரேனியப் படையெடுப்பின் தொடர்பில் ரஷ்யா மீது சிங்கப்பூர் பொருளியல் மற்றும் வர்த்தகத் தடைகளை விதித்தபோதும், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ரஷ்யக் கலாசார நிலையத்தைக் கட்டுவதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு தொடரும் எனத் தெரியவந்துள்ளது. ரங்கூன் சாலையில் இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணிகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யக் கலாசார நிலையத்திற்காக ஃபேரர் பார்க் வட்டாரத்தில் 3,265 சதுர மீட்டர் நிலப் பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது (படம்). அதில் எவ்வளவு கட்டடத்துக்குப் பயன்படுத்தப்படும் என்ற தெளிவான தகவல் இல்லை. 2017ஆம் ஆண்டு முதல் 2047ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ள அந்த நிலப்பரப்பில் நான்கு மாடிக் கட்டடம் அமைக்கலாம் என்று சிங்கப்பூர் நில ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் அங்கு நிலம் திருத்தும் பணி இடம்பெற்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

