வெளிநாட்டு ஊழியர்களின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் லாரிகளில் இனி வேகக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்படும்.
அத்துடன் ஓட்டுநர் மிகவும் களைப்பாகக் காணப்பட்டாலோ வாகனத்தைப் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டினாலோ அவரை உடனே நிறுத்துவதற்கு ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும்.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களை வாகனத்தில் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு மனிதவள அமைச்சு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கு வேலை செய்வது, மாதத்திற்கு 72 மணி நேரம்வரை கூடுதல் நேரம் வேலை செய்வது போன்ற வரம்புகள் நடைமுறையில் உள்ளன.
புதிய நடைமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பேசினார். லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் மேலும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதைப் புதிய நடைமுறைகள் உறுதிப்படுத்துவதுடன் அனைத்து ஊழியர்களையும் பேருந்துகளில் அழைத்துச் செல்வதில் உள்ள சிரமங்களையும் அவர் வலியுறுத்தினார். லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை அழைத்துச் செல்லும் நடைமுறையை முற்றிலும் அகற்ற முடியுமா என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதியைச் சேர்ந்த திரு மெல்வின் யோங் மற்றும் இதர ஆர்வலர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
மனிதவளம், வேகக் கட்டுப்பாடு ஆகிய அம்சங்கள் தொடர்பான புதிய சட்டங்களைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு செல்லும் அனைத்து லாரிகளிலும் மழைக் காலத்தில் நீர்ப்புகா கித்தா துணிகள் பொருத்தப்பட வேண்டும் என்று டாக்டர் கோ தெரிவித்தார்.
இதற்கிடையே, உற்பத்தி, கட்டுமானம், கடல்துறைப் பிரிவுகளில் உள்ள 280,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் போக்குவரத்துக்குப் போதுமான பேருந்துகளும் ஓட்டுநர்களும் இல்லை என்று தனியார் பேருந்து நடத்துநர்கள் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

