சிங்கப்பூர் காவல்துறை 97 பேரை விசாரித்து வருகிறது. அவர்களில் இரவு விடுதி கேளிக்கைப் பெண்கள் என்று சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த, நால்வரும் அடங்குவர். அந்த நால்வரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகி இருந்தது.
சையது ஆல்வி ரோட்டில் உரிமம் பெறாமல் செயல்பட்ட கேடிவி பாணி கூடம் ஒன்றில் கூடி கொவிட்-19 பாதுகாப்பு விதிகளை அவர்கள் மீறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
லிட்டில் இந்தியாவில் இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் உணவு, பாண விடுதியாகச் செயல்பட்ட கூடம் ஒன்றை காவல் துறை பிப்ரவரி 15ஆம் தேதி சோதனையிட்டது.
அந்த விடுதியில் தடுப்புக் கதவு ஒன்றுக்குப் பின்புறத்தில் மறைவாகச் செயல்பட்ட கேடிவி பாணி கூடத்தில் 60 ஆடவர்களும் 37 மாதர்களும் இருந்ததாக காவல் துறை நேற்று தெரிவித்தது. அவர்களுக்கு வயது 24 முதல் 65 வரை.
அந்தக் கடைத்தொகுதியின் மூன்று மேல் மாடிகளில் 22 கராவோக்கே அறைகள், சாதனங்களுடன் இருந்தது மேலும் நடத்தப்பட்ட புலன்விசாரணை மூலம் தெரிய வந்தது. அங்கு இருந்தவர்களுக்கு உணவு, பான விடுதியில் இருந்து மதுபானம் விற்கப்பட்டது.
அங்கு இருந்தவர்களில் சீனா வைச் சேர்ந்த நான்கு பெண்கள், கேளிக்கைப் பெண்களாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று சந்தேதிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது.
அந்த நான்கு பெண்களும் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் கைதாயினர். அந்தப் பெண்கள் 33 வயது முதல் 48 வயதுள்ளவர்கள்.
உரிமம் பெறாத அந்த கேடிவி பாணி விடுதியை நடத்தியதாகக் கூறப்படும் 41 வயது ஆடவர், மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதோடு, அனுமதிக்கப்படாத ஒரு நிலையத்திற்குள் பலரையும் அனுமதித்து அதன் மூலம் பாது காப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படுவதன் தொடர்பிலும் அதிகாரி கள் அவரை விசாரிக்கிறார்கள்.
கொவிட்-19 பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதம் வரைப்பட்ட சிறைத் தண்டனை, $10,000 வரைப்பட்ட அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
செல்லுபடியாகக்கூடிய உரிமம் இன்றி பொதுப் பொழுதுபோக்கு விடுதி நடத்தி அங்கு மதுபானம் விற்றால் $20,000 வரை அபரதம் உண்டு.

