சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்ட 'தெமாசெக் அரிசி' என்ற நெற்பயிர் முதன்முறையாக அறுவடையாகி இருக்கிறது.
நாட்டின் உணவுத் தேவைக்கு ஏற்படக்கூடிய மிரட்டலைச் சமாளிக்க நடைமுறைக்கு வரும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் தெமாசெக் அரிசி ரக நெல் விளைச்சல் சாதிக்கப்பட்டு இருக்கிறது.
தெம்பனிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 146ன் சுவர் நெடுகிலும் அமைக்கப்பட்டு உள்ள செங்குத்தான உயர் தொழில்நுட்பப் பண்ணையில் பயிரிடப்பட்ட தெமாசெக் அரிசி ரகநெல் நேற்று அறுவடையானது. இப்போதைக்கு அந்த அரிசி தெமாசெக் உயிராய்வியல் ஆய்வகத்தின் ஆய்வு உருவாக்க நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
நகரச் சூழலில் நெற்பயிரைப் பயிரிடும் விதம் பற்றி அந்த ஆய்வகம் மேலும் பல ஆய்வுகளை நடத்தும். இந்த முன்னோடித் திட்டத்திற்கு தெம்பனிஸ் நகர மன்றமும் தெமாசெக் அறநிறுவனமும் இந்த ஆய்வகமும் ஆதரவளிக்கின்றன. நெல் அறுவடையை வரவேற்றுப் பேசிய தெம்பனிஸ் நகர மன்றத் தலைவியான திருவாட்டி செங் லி ஹுய், சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருள்களையே பெரிதும் சார்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
உணவுப்பொருள்கள் வரத்து பாதிக்கக்கூடிய மிரட்டல் இருப்பதையும் அவர் சுட்டினார்.
தெமாசெக் நெல் ரகம் முதலில் இந்த ஆய்வகத்தின் பசுமைக் கூடங்களில் விதையிடப்பட்டு நாற்று வளர்க்கப்பட்டது. பிறகு சென்றஆண்டு அக்டோபரில் அந்த நாற்றுகள் புளோக் 146 செங்குத்துப் பண்ணையில் நடப்பட்டன.
இந்த ரக நெல் இந்தோனீசியாவில் 2016 முதல் வர்த்தக நோக்கத்திற்காக பயிரடப்படுகிறது.
தெம்பனிஸ் உயர் தொழில்நுட்பப் பண்ணையில் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் பயிருக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
ஒரு வயலில் ஒரு கிலோ அரிசியை விளைவிக்க பொதுவாக 2,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் 750 லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதுமானது என்று வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டார்.
தெமாசெக் நெல் ரகப் பயிருக்கு குறைவான தண்ணீரே போதும். இரண்டு வார காலம் கூட தண்ணீர் இல்லாமலே அது உயிர்வாழ்ந்துவிடும். தெமாசெக் நெல் ரகப் பயிர் ஒருபுறம் இருக்க, தெம்பனிஸ் பண்ணையில் இதர கீரை வகை காய்கறிகளும் பயிராகின்றன.

