சொத்துச் சந்தை தணிக்கும் நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

3 mins read
1c35a470-d776-41c2-980d-e919b474c78a
-

1. என்னென்ன புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன?

- இரண்டுக்கும் அதிகமான வீடுகளை வாங்குவோர் செலுத்த வேண்டிய முத்திரை வரி உயர்த்தப்படும்.

- மொத்த கடன் அடைப்பு விகிதம் குறைக்கப்படும். இதனால் வீட்டு அடமானக் கடனை அடைக்க செலுத்தப்படும் மாதாந்திர தொகைக்கு வரம்பு விதிக்கப்படும். இதன் மூலம் குறைவான வீட்டு அடமானக் கடன்கள் வழங்கப்படும்.

- வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழங்கும் வீட்டு அடமானக் கடன்களும் குறைக்கப்படும்.

2. புதிய நடவடிக்கைகள் என்று முதல் நடப்புக்கு வரும்?

- புதிய நடவடிக்கைகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வீட்டை வாங்குவோரும் விற்பவரும் ஆவணத்தில் கையெழுத்திட்ட (ஓடிபி) அனைத்து சொத்துப் பரிவர்த்தனைகளும் இந்தப் புதிய நடைமுறைக்கும் உட்படும்.

- இம்மாதம் 16ஆம் தேதிக்கு முன்பு ஓடிபியில் கையெழுத்திட்டவர்கள் கூடுதல் முத்திரை வரியைச் செலுத்த தேவையில்லை. ஆனால் அவர்கள் அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் அல்லது காலாவதி தேதி அதற்கு முன்பு இருந்தால் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் ஓடிபியைப் பதிவு செய்துவிட வேண்டும். ஓடிபியில் உள்ள விவரங்கள் டிசம்பர் 16ஆம் தேதியில் அல்லது அதற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டிருக்கக் கூடாது.

3. உயர்த்தப்பட்ட முத்திரை வரிகள் வீடு வாங்குவோரை எவ்வாறு பாதிக்கும்?

- இரண்டாவது வீடு வாங்கும் சிங்கப்பூரர்கள் செலுத்த வேண்டிய முத்திரை வரி

12 விழுக்காட்டிலிருந்து 17 விழுக்காடாக உயர்த்தப்படும். மூன்றாவது மற்றும் அதற்கும் அதிகமான வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்கள் செலுத்த வேண்டிய முத்திரை வரி 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

- இரண்டாவது வீடு வாங்கும் நிரந்தரவாசிகள் செலுத்த வேண்டிய முத்திரை வரி

15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப்படும். மூன்றாவது மற்றும் அதற்கும் அதிகமான வீடுகளை அவர்கள் வாங்கினால், செலுத்த வேண்டிய முத்திரை வரி 15 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக உயர்த்தப்படும். முதல் வீடு வாங்கும் நிரந்தரவாசிகள் ஐந்து விழுக்காடு முத்திரை வரி செலுத்த வேண்டும். இதில் மாற்றம் ஏதுமில்லை.

- சிங்கப்பூரில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்கள் செலுத்த வேண்டிய முத்திரை வரி

20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. கடுமையாக்கப்படும் வீட்டு அடமானக் கடன் வரம்புகள் தனியார் வீடுகளை வாங்வோரை எவ்வாறு பாதிக்கும்?

- மொத்தக் கடன் அடைப்பு விகிதம் 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காடாகக் குறைக்கப்படும். இதன்மூலம் வீட்டு அடமானக் கடனை அடைக்க செலுத்தப்படும் மாதாந்திர தொகை, கடன் வாங்கியவரின் வருமானத்தில் 55 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். - இம்மாதம் 15ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓடிபியைப் பதிவு செய்தவர்களின் மொத்தக் கடன் அடைப்பு விகிதம் 60 விழுக்காடாக இருக்கும்.

5. கடுமையாக்கப்பட்ட வீட்டு அடமானக் கடன் வரம்புகள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் வாங்குவோரை எவ்வாறு பாதிக்கும்?

- வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழங்கும் வீட்டு அடமானக் கடன்கள் வீட்டு விலையில் 90 விழுக்காட்டிலிருந்து 85 விழுக்காடாகக் குறைக்கப்படும்.

- இம்மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு புதிய வீவக வீடு வாங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

- வீவக மறுவிற்பனை வீடு வாங்குவோருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும். குறிப்பாக, இம்மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு மறுவிற்பனை விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்பவர்களுக்கு வீட்டு விலையில் 85 விழுக்காட்டு கடன் வழங்கப்படும். வீட்டை வாங்குவோர், வீட்டை விற்பவர் ஆகியோரின் மறுவிற்பனை படிவங்கள் கிடைத்த பிறகு மறுவிற்பனை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வீவக எடுத்துக்கொள்ளும்.

- வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து வீட்டு அடமானக் கடன் பெறாமல் மற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கினால் அதிகபட்சம் 75 விழுக்காடு கடன் மட்டுமே வழங்கப்படும்.