வெளிநாட்டு ஊழியர்களைக் கள்ளத்தனமாக வரவழைக்கும் கும்பல்

வெளிநாட்டு ஊழியர்களைக் கள்ளத்தனமாக வரவழைக்கும் கும்பல்

2 mins read
87f4ad90-0c81-41f5-b070-636ef1ff9081
சட்டவிரோதமாக ஊழியர்களை வரவழைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களை அழைத்துச் செல்லும் மனிதவள அமைச்சு அதிகாரிகள். படம்: மனிதவள அமைச்சு -

சட்டவிரோதமாக ஊழியர்களை வரவழைத்ததாக சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) 12 மணி நேர அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

பொய்யான உறுதிமொழிப் பத்திரங்கள் மூலம் வேலை அனுமதி அட்டை பெற வெளிநாட்டினரை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் சந்தேகக் கும்பல் ஒன்றிடம் நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தீவு முழுவதும் 22 இடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக வேலை அனுமதி அட்டை பெற வெளிநாட்டினர் முயற்சிகள் மேற்கொள்வதாக ஜூலை மாதம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டதாக அமைச்சு கூறி உள்ளது.

சில மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர பகுப்பாய்வுகள் மூலம் சந்தேகக் கும்பல் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இங்கு சட்டபூர்வ தொழில் எதையும் செய்யாத சில போலி நிறுவனங்களை அந்தக் கும்பல் உருவாக்கி இருப்பதும் அவற்றின் மூலம் வேலை அனுமதி அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்வதும் தெரிய வந்தது.

சட்டவிரோத ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்கு ஏதுவாக, நிறுவனங்களின் உள்ளூர் ஊழியர் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் வேலைக்கு அமர்த்தியதாகக் காட்டி, அவர்களின் பெயரில் மத்திய சேம நிதிப் பங்களிப்புகளைச் செய்வதிலும் கும்பல் ஈடுபட்டது.

உள்ளூர் ஊழியர்களின் ஒதுக்கீட்டைக் காட்டி அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த வேலை அனுமதி அட்டைக்கு போலி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்.

அதற்குப் பொய்யான உறுதிமொழிப் பத்திரங்களை அவை சமர்ப்பிக்கும். இந்த சட்டவிரோதச் செயலுக்கு வெளிநாட்டினரிடமிருந்து அவை பலன் பெறும்.