பார்சல், மலிவு விலை தொடர்பில் மோசடி; பொதுமக்களுக்கு போலிஸ் எச்சரிக்கை

பார்சல், மலிவு விலை தொடர்பில் மோசடி; பொதுமக்களுக்கு போலிஸ் எச்சரிக்கை

2 mins read
9278191d-6b13-4924-972f-d14e604f8e7b
-
Google News Preferred Icon

வங்கி அல்லாத மற்ற நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பதாக போலிசார் எச்சரித்து இருக்கிறார்கள்.

பார்சல் பொருள் விநியோகம், மலிவான விலைகளுக்குப் பொருட்கள் தொடர்பில் போலி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், போலி விளம்பரங்கள் மூலம் அந்த மோசடிகள் இடம்பெறுவதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல் 93க்கும் மேற்பட்டவர்கள் மோசடிக்கு இலக்காகி இருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் $140,000 இழந்து இருக்கிறார்கள் என்று அறிக்கையில் போலிஸ் தெரிவித்தது.

சிங்போஸ்ட், டிஎச்எல் போன்ற பொருள் விநியோக நிறுவனங்களைச் சேர்ந்தவை போன்ற போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

அவற்றில் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி பார்சல் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அத்தகைய போலித் தகவல்கள் தூண்டிவிடுகின்றன.

சில மோசடிகளில் உணவு, வீட்டுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்று கூறும் விளம்பரங்கள் கூட இடம்பெறுகின்றன. ஒருவர் அவற்றை இணையத்தில் தொடரும்போது அவை மோசடி இணையத் தளங்களுக்குக் கொண்டு செல்கின்றன.

அந்தத் தளங்கள் பிரத்தியேக கடன் பற்று அட்டை விவரங்களையும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் கேட்கின்றன.

அவற்றை நம்பிவிடும் அப்பாவிமக்கள், பணத்தை இழந்த பிறகே தங்களுக்கு ஏற்பட்ட கதி பற்றி தெரிந்துகொள்கிறார்கள்.

பொதுமக்கள் இத்தகைய மோசடிகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலிசார் ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.

நன்கு தெரியாத மின்னஞ்சல், குறுஞ்செய்திகளில் இடம்பெற்றிருக்கும் தொடர்புகளை நம்பவேண்டாம்.

நம்பகமான தரப்புகளில் இருந்து மட்டும் பொருட்களை வாங்குங்கள். இணையத்தில் ஒரு தகவல் கிடைத்தால், அது உண்மைதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் உங்களுக்கு வருகிறது என்றால் நீங்கள் இணையத்தில் எந்தப் பரிவர்த்தனையையும் செய்யவில்லை என்றால் உடனடியாக வங்கியுடன் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களுடைய சொந்த தகவல்களை யாரிடமும் தெரியப்படுத்தாதீர்கள். கடன், பற்று அட்டைகளில் போலியான கட்டணங்கள் ஏதேனும் இடம்பெற்றால் உடனடியாக வங்கியிடம் தெரிவித்துவிடுங்கள், உங்கள் அட்டையை ரத்து செய்துவிடுங்கள் என்று போலிஸ் ஆலோசனை கூறி இருக்கிறது.

மோசடியில் சிக்காமல் இருந்துகொள்ள உதவும் மேல் தகவல்களைப் பெற பொதுமக்கள் www.scamalert.sg என்ற தளத்தை அணுகலாம். அல்லது 1800-722-6688 என்ற நேரடி எண் மூலம் தொடர்புகொள்ளலாம்.