குறைந்த வருமானம் ஈட்டும் சுயதொழில் செய்வோர் அரசாங்க உதவிக்குத் தகுதிபெற வேண்டுமாயின் அவர்கள் தங்களது மெடிசேவ் கணக்கில் பணம் போடுவது அவசியம். வேலைநலன் வருமான உதவித் திட்டத்தின்கீழ் இதர தகுதிகளைப் பெற்றவர்கள் மத்தியில் 10ல் ஒன்பது சுயதொழில் புரிவோர் அவ்வாறு செய்துள்ளனர். அவர்களின் மாதாந்திர சராசரி வருமானம் $2,300 அல்லது அதற்குக் கீழ். இது வேலை ஆண்டு 2018ன் கணக்கு.
வேலைநலன் வருமான உதவித் திட்டம் குறைந்த வருமானம் ஊழியருக்கும் சுயதொழில் புரிவோருக்கும் உதவி செய்கிறது. தகுதி பெறும் சுயதொழில் புரிவோர் ஆண்டுக்கு $2,667 வரையிலான வேலைநலன் வழங்கீட்டைப் பெற முடியும்.
குறைந்த வருமானம் ஈட்டும் எல்லா ஊழியர்களும் சுயதொழில் புரிவோரும் தங்களது மத்திய சேமநிதிக் கணக்கில் பணம் செலுத்துவதன் மூலம் வேலை
நலன் பலன்களை அனுபவிக்க முடியும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"வேலைநலன் என்பது ஒரு நிரந்தரத் திட்டம் என்பதால் இவ்வாறு செய்வது அவசியம். ஊழியர்கள் தங்களது நீண்டகால ஓய்வுக்கும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கும் சேமிக்க வேண்டிய தனிப்பட்ட பொறுப்பைத் தொடருவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. அதேநேரம் அவர்
களுக்கு வேலைநலன் மூலம் அரசாங்க உதவியும் கிடைக்கிறது," என்றார் திரு ஸாக்கி.
அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர் லியோன் பெரேரா எழுப்பிய வினாவுக்கு அவர் பதிலளித்தார். வேலைநலன் வருமான உதவித் திட்டத்திற்குத் தகுதிபெறும் சுயதொழில் புரிவோர் எத்தனை பேர் என்றும் மெடிசேவ் கணக்கில் பணம் செலுத்த இயலாதோர் எத்தனை பேர் என்றும் அவர் கேட்டிருந்தார்.

