கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரின் கடல் மட்டம் தற்போது இருப்பதைக் காட்டிலும் குறைந்தது 20 மீட்டர் குறைவாக இருந்தது. இருப்பினும் பனியுகம் ஒரு முடிவுக்கு வந்த நிலையில் பனிப்பாறைகள் உருகிப் சமுத்திரங்கள் மற்றும் கடல்களின் நீர் மட்டம் அடுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உயர்ந்துகொண்டே போனது.
நாளடைவில் உயரும் நீர் மட்டமே வெள்ளமென வந்து சிங்கப்பூரின் தெற்கு கரையோரத்தின் சதுப்புநிலக் காட்டை அழித்தது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பருவநிலை விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் 'தி ஹொலசீன்' என்ற அறிவியல் சஞ்சிகையில் நேற்று வெளியிடப்பட்டன.
தற்போது உயரும் கடல் நீர் மட்டம் இனி வரும் ஆண்டுகளில் நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அவர்களின் கண்டுபிடிப்புகள் ஓர் ஆழமான பார்வையைத் தந்துள்ளன.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 5,000 ஆண்டுகளுக்கு முன் வரை கடல் மட்டம் ஆண்டுக்கு 10 மில்லிமீட்டர் முதல் 15 மில்லிமீட்டர் வரை உயர்ந்துகொண்டு போனதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மனித உமிழ்வால் 20ஆம் நூற்றாண்டில் பூமி வெப்பமயமாகி வந்தது.
இன்று ஆண்டுக்கு 3 முதல் 4 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கும் நிலையில் கடல் மட்டம் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் கண்டறிய, ஆய்வாளர்கள் பூமியின் ஆழத்தைத் தோண்ட வேண்டியிருந்ததெனக் கூறினர்.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலத்தில் இடப்படும் துவாரங்களை ஆயிரக்கணக்கில் ஆராய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஆழத்தில் கிடைப்பனவற்றைக் கொண்டு சிங்கப்பூரில் கடல் மட்ட அளவு எவ்வாறு காலப்போக்கில் மாறியது என்பதை அறுதியிடலாம் என்றனர் ஆய்வுக்குழுவினர்.
"இந்த ஆய்வு மதிப்புமிக்க ஒரு பதிவாகும். இதை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்திக் கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்," என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் நிபுணர் பேராசிரியர் ஃபிலிப் கிப்பார்ட் தெரிவித்தார்.

