பொதுப் பேருந்துகளுக்கு சூரியசக்தி: சிங்கப்பூரில் புதிய முறை சோதனை

பொதுப் பேருந்துகளுக்கு சூரியசக்தி: சிங்கப்பூரில் புதிய முறை சோதனை

2 mins read
dcaddf9e-841b-4813-b3f9-55760a57dcaa
-
Google News Preferred Icon

சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்ட பொதுப் பேருந்துகள் சிங்கப்பூரில் முதல் முறையாக சோதித்துப் பார்க்கப்படுகின்றன. 'கோ-அஹெட் சிங்கப்பூர்' பேருந்து நிறுவனம் அந்த முயற்சியில் இறங்கி உள்ளது. பேருந்துகளின் வெளிப்புற கூரையில் 1.6 மில்லிமீட்டர் தடிமன் உள்ள சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.

வளைந்து கொடுக்கக்கூடிய அதேநேரம் எளிதில் சிதையாத அந்தத் தகடுகளை 'மேன் ஏ22 யூரோ 6' என்னு டீசல் பேருந்துகள் இரண்டில் அந்நிறுவனம் பொருத்தி உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் வரை சுமார் ஆறு மாத காலத்திற்கு சூரியசக்தி ஆற்றல் சோதிக்கப்படும்.

பாசிர் ரிஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பல பகுதிகளுக்குச் சென்றுவிட்டு அதே நிலையத்திற்குத் திரும்பிவரும் சேவை எண் 15, சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் ஒன்று. இதன் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள 20 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட சூரிய சக்தித் தகடுகள் 1,000 வாட்ஸ் எரிசக்தியை உருவாக்கும் திறன்பெற்றவை.

பேருந்தில் உள்ள பேட்டரி எனப்படும் மின்கலம் சூரியசக்தி உருவாக்கித் தரும் எரிசக்தியைச் சேமிக்கும். பேருந்தின் இயந்திரத்தை முடுக்கிவிடவும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலும் விளக்குகள் போன்றவவற்றைப் பயன்படுத்தவும் அந்த எரிசக்திப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் 'கோ-அஹெட் சிங்கப்பூர்' நிறுவனத்தின் ஒவ்வொரு பேருந்தும் ஆண்டு ஒன்றுக்கு 1,400 லிட்டர் டீசலைச் சேமிக்க முடியும். அதாவது, அந்தப் பேருந்துகளின் எரிபொருள் பயன்பாட்டை 3 முதல் 4 விழுக்காடு வரை சேமிக்க இயலும். அத்துடன் ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ஆற்றலும் அந்தப் பேருந்துகளுக்குக் கிடைக்கும்.

இந்த சூரியசக்தித் தகடு பொருத்தப்பட்ட பேருந்து சேவை முறையை பிரிட்டனின் சௌதம்ப்டன் பகுதியில் 2019ஆம் ஆண்டு முதல் 'கோ-அஹெட்' நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது. அங்கு தற்போது அந்தத் தகடுகள் பொருத்தப்பட்ட 18 பேருந்துகள் உள்ளன.

சிங்கப்பூரில் நடத்தப்படும் ஆறு மாத கால சோதனையின்போது, சூரியசக்தியை அதற்கான தகடுகள் எந்த அளவுக்குப் பெறுகின்றன, எரிபொருள் நுகர்வைக் குறைக்க எந்த அளவுக்கு அது பயனுள்ளதாக உள்ளது, அதிக வெப்பநிலையின்போதும் பேருந்துகளை அன்றாடம் கழுவும்போதும் தகடுகள் அவற்றைத் தாங்கி உறுதியாக உள்ளனவா - என்பன போன்ற அம்சங்கள் உறுதிப்படுத்தப்படும்.