இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குநராக உள்ள திருமதி ஐவி வோங், இணையத் தடயவியல் போன்ற சேவைகளுக்காக உத்தி, விற்பனைத் திட்டங்களை உருவாக்குவதில் தமது குழுவை வழிநடத்துகிறார்.
தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் இந்தப் பணியைத் தம்மால் செய்ய முடியும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
"எனது பள்ளி நாட்களில் நான் தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பெறவில்லை. கட்டட, சொத்து நிர்வாகத் துறையில் நான் பட்டயக் கல்வியை மேற்கொண்டேன். எனினும், தொழில்நுட்பத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஏதாவது ஒரு விதத்தில் அதில் சேர நான் விரும்பினேன்," என்று திருமதி வோங், 39, நினைவுகூர்ந்தார்.
2012ஆம் ஆண்டில் ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவர் பணி அமர்த்தப்பட்டார். அப்போதுதான் தொழில்நுட்பத் திறன் பயற்சி அளிக்கும் பல்வேறு பாடப் பிரிவுகளில் அவர் சேர்ந்து பயின்றார். இணையப் பாதுகாப்பு, தகவல் போன்ற அம்சங்களை உள்ளடக்கும் தேர்வு ஒன்றிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.
"தொழில்நுட்பத் துறையில் நுட்பமான அம்சங்கள் பலவும் இருப்பதால் அத்துறையில் சேருவதற்கு ஒரு சிலருக்குத் தயக்கம் ஏற்படலாம். எனினும், முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை," என்று திருமதி வோங் கூறினார்.
வேலை தேடுவோர், வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறையில் சேர விண்ணப்பிக்குமாறு அவர் ஊக்கமளித்தார்.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் இதே கருத்தை முன்வைத்தன.
அமேசான் சிங்கப்பூர் நிறுவனத்தின் மேலாளர் ஹென்ரி லோ, "தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறாத, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பலரும் எங்களது நிறுவனத்தில் ஊழியர்களாக உள்ளனர். பல்வேறு திறன்கள் உடையோரையும் உள்ளடக்கும் எங்களது நிறுவன கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம்," என்றார்.
விற்பனை, விளம்பரப் பிரிவு போன்றவற்றில் 250க்கும் அதிகமான வேலைகளை நிரப்ப அமேசான் சிங்கப்பூர் நிறுவனம் முற்படுகிறது.
இவ்வாண்டு 2,000க்கும் அதிகமானோரைப் பணியமர்த்த திட்டமிட்டிருக்கும் சிங்டெல் நிறுவனம், உயர்தொழில்நுட்பம் மற்றும் அடிப்படைத் தொழில்நுட்பப் பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியான திருமதி ஐலீன் டான், "சரியான கற்றல் மனப்போக்குடனும் போதிய பயிற்சியுடனும் தொழில்நுட்ப அனுபவம் இல்லாதவர்கள்கூட அடிப்படைத் தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் வேலைகளைச் செய்ய முடியும்," என்று கூறினார்.
கொவிட்-19 சூழலில் ஒட்டுமொத்தமாக வேலைச் சந்தை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களைப் பணியமர்த்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
மின் வணிக நிறுவனமான 'லஸாடா', 100க்கும் அதிகமான வேலை இடங்களை நிரப்பவிருக்கிறது. புதிதாக வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவோரை வேலையில் அமர்த்துவதில் லஸாடா நிறுவனம் முன்னுரிமை அளித்து வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு மின் வணிக நிறுவனமான 'ஷாப்பி'யில் 280க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக மேம்பாட்டு ஆய்வாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்ற வேலைகளில் ஊழியர்களைப் பணியமர்த்த ஷாப்பி திட்டமிட்டு வருகிறது.
தொழில்நுட்பம் சாராத பின்னணியைச் சேர்ந்த பல ஊழியர்கள் தமது நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக ஷாப்பியின் வட்டாரச் செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் லிம் டெக் யோங் கூறினார்.

