குடி போதையில் போலிஸ் கப்பலை இடித்த ஆடவருக்கு அபராதம்

1 mins read
ad60489f-cd32-4156-8ca7-e5f9300c8d95
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தன் படகை நீரிணையில் செலுத்திச் சென்ற டான் சூன் டெக்(56), கடற்கரைக் காவல் படையின் ரோந்து கப்பலை மோதினார்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கப்பலைக் கவனக்குறைவாக ஓட்டியதன் தொடர்பில் டான்னுக்கு நேற்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

புலாவ் உபின் அருகே மீன் பண்ணை வைத்திருக்கும் டான், தன் படகைக் கொண்டு பயணம் செய்து வந்ததாக கூறப்பட்டது.கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் டான் தன் நண்பர்களைச் சந்தித்து மது அருந்தியதாகவும் அதன் பின்னர் தன் பண்ணைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரவு 10 மணியளவில் பொங்கோலில் உள்ள மரினா கேளிக்கை விடுதியை நோக்கித் தன் படகைச் செலுத்தியபோது, நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு கடற்கரைக் காவல் படை கப்பல் மீது டான் மோதியதாக கூறப்பட்டது.

கப்பலில் இருந்தவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை என்றாலும் கப்பலைச் சரிசெய்வதற்கு சுமார் $9,000 செலவானதாக அறியப்படுகிறது.