எம்ஆர்டி நிலையத்தில் மின்தூக்கி கோளாறு; சக்கர நாற்காலியிலிருந்த பயணியை இரண்டு மாடிகளுக்கு சுமந்து சென்ற இளையர்

எம்ஆர்டி நிலையத்தில் மின்தூக்கி கோளாறு; சக்கர நாற்காலியிலிருந்த பயணியை இரண்டு மாடிகளுக்கு சுமந்து சென்ற இளையர்

2 mins read
d271df6d-f2b8-4dfe-8aeb-49596195da57
எம்ஆர்டி மேடையிலிருந்து இரண்டு மாடிகளுக்கு படிக்கட்டு வழியாக சுமார் 80 கிலோ எடையுள்ள கிளாரிசின் தாயாரைத் தூக்கிக்கொண்டு சென்றார் அந்த இளையர். படம்: ஸ்டோம்ப் -
Google News Preferred Icon

நொவீனா எம்ஆர்டி நிலையத்தின் ரயில் மேடையில் இருக்கும் மின்தூக்கி பழுதடைந்துவிட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பலர் செய்வதறியாது அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அன்று தமது தாயாரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் தம் தாயாருடன் நொவீனாவுக்கு காலை 9.40 மணியளவில் சென்ற ஸ்டோம்ப் வாசகரான கிளாரிஸ், அந்த நிலையத்தின் ரயில் மேடையில் மின்தூக்கி பழுது ஏற்பட்டு அது செயல்படாமல் இருப்பதை அறிந்தார். கிளாரிசின் தாயாருக்கு இரண்டு கால்களும் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டதால் அவரால் நடக்க முடியாத நிலை.

அவரைப் போலவே சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய மேலும் பல பயணிகள் மின்தூக்கிக்கு அருகில் கூடியிருந்தனர். அதனையடுத்து ரயில் நிலைய அதிகாரியைத் தொடர்புகொண்டபோது, மீண்டும் ரயிலேறி தோ பாயோவுக்குச் சென்று அங்கிருந்து 143 தடத்தில் பேருந்துச் சேவை மூலம் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று கிளாரிசுக்கு அறிவுறுத்தப்பட்டது. அல்லது மருத்துவரைக் காண்பதை வேறொரு நாளுக்குத் தள்ளிப்போடலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடக்க முடிந்த சிலர் மின்படிக்கெட்டுகள் வழியாக நிலையத்திலிருந்து வெளியேறினர். அவர்களது சக்கர நாற்காலியை எடுத்துச் செல்ல நிலைய ஊழியர்கள் உதவினர்.

வேறு சிலர் தோ பாயோ வழியாக மருத்துவமனைக்குச் சென்றனர்.

கிளாரிஸ் தன் தாயாரை மேல் தளத்துக்குத் தூக்கிச் செல்ல தமது உதவியாளருடன் எம்ஆர்டி நிலைய ஊழியர் ஒருவரது உதவியும் தேவைப்படும் என்றெண்ணி நிலைய ஊழியர்களை அணுகினார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக பயணிகளைச் சுமந்து செல்ல இயலாது என நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த இளையர் ஒருவர், கிளாரிசின் தாயாரை படிக்கட்டு வழியாகச் சுமந்து செல்ல முன்வந்தார்.

எம்ஆர்டி மேடையிலிருந்து இரண்டு மாடிகளுக்கு படிக்கட்டு வழியாக சுமார் 80 கிலோ எடையுள்ள கிளாரிசின் தாயாரைத் தூக்கிக்கொண்டு சென்றார் அந்த இளையர்.

இதனைச் செய்து முடித்ததும், நல்ல உள்ளம் கொண்ட அந்த இளையர் உடனடியாக ரயில் மேடைக்குச் சென்றுவிட்டதால் அவ்விளையரின் பெயரைக் கேட்கவில்லை என்றார் கிளாரிஸ்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்
எஸ்எம்ஆர்டிசக்கர நாற்காலிஇளையர்