கலப்பினப் பிள்ளைகளில் பாதிக்கும் அதிகமானோர் கற்கும் இரண்டாம் மொழி சீனம்

3 mins read
bcdb7922-bae9-4fdb-adcb-d65401f5f2a2
-

கலப்பினத் தம்பதிகளின் பிள்ளைகளில் பாதிக்கும் அதிகமானோர் உள்ளூர் பள்ளிகளில் தாய்மொழியாக சீன மொழியைக் கற்பதாகக் கல்வி அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், கலப்பினப் பிள்ளைகளில் சுமார் 87 விழுக்காட்டினர் சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று முக்கிய தாய்மொழிகளில் ஒன்றைக் கற்றதாகத் தெரிய வருகிறது. இவர்களுள் 61 விழுக்காட்டினர் சீன வகுப்பிலும், 38 விழுக்காட்டினர் மலாய் வகுப்பிலும், ஒரு விழுக்காட்டினர் தமிழ் வகுப்பிலும் சேர்ந்தனர்.

சிங்கப்பூர் மக்களின் அதிகரித்துவரும் பன்மயத்திற்கேற்ப, அமைச்சின் மொழிக் கொள்கை அதிக நீக்குப்போக்காகி இருப்பதாக அமைச்சின் தாய்மொழிப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி யெங் பொயி ஹொங் கூறினார்.

உதாரணமாக, சீனம், மலாய் அல்லது தமிழ் அல்லாத இரண்டாம் மொழியைப் பிள்ளைகள் கற்கலாம். சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கையின்படி, எல்லா மாணவர்களும் தொடக்கநிலை 1ல் இருந்து ஆங்கிலமும் தாய்மொழியும் கற்கவேண்டும்.

சீன, மலாய், இந்திய இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அவரவரது தாய்மொழி வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். சில இந்தியப் பிள்ளைகள் தமிழ் அல்லாத இந்திய மொழி வகுப்புகளில் சேர்கின்றனர்.

ஆயினும், ஒவ்வொரு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி வகுப்புப் பிரிவிலும் சுமார் 6 முதல் 7 விழுக்காட்டினர், வீட்டில் அடிக்கடி பேசாத மொழியைத் தாய்மொழியாகக் கற்பதாகத் திருவாட்டி ஹெங் தெரிவித்தார். இது அதிகாரத்துவ தாய்மொழிகளில் ஒன்றாக அல்லது அரபு, பர்மிய மொழி, தாய்லாந்து மொழி, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது ஜப்பானிய மொழியாக இருக்கலாம். நீண்டகாலத்திற்குப் பிறகு சிங்கப்பூர் கல்வி முறையில் சேரும் பிள்ளைகள் இம்மொழிகளைக் கற்கின்றனர்.

சென்ற ஆண்டு, ஐந்தில் ஒரு திருமணம் அல்லது 22.4 விழுக்காட்டுத் திருமணங்கள் கலப்பினத் திருமணங்களாக இருந்தன. இது 2008ஆம் ஆண்டின் 16.7 விழுக்காட்டைவிட அதிகம்.

மற்ற தாய்மொழிகளைக் கருத்தில் கொண்ட போதிலும், சீன மொழி கற்பதே விவேகமானதாகத் தோன்றியதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆயினும், தங்களது பிள்ளைகள் பெற்றோர் இருவரது மரபுகளையும் கற்றுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.

திருமதி ஹனி டான்-விருக்டிவாட்டரும் அவரது டச்சு-இந்தோனீசிய கணவரும் வீட்டில் பாரம்பரிய டச்சு உணவை அடிக்கடி சமைப்பார்கள். ஆனால், அவர்களது 23 வயது மகனும் 10 வயது மகளும் சீன மொழியைத் தாய்மொழியாகப் படித்தனர்.

"நாம் ஆசியாவில் இருப்பதால், சீன மொழி நடைமுறைக்குகந்த மொழியாகத் தோன்றியது," என்றார் 47 வயதாகும் இல்லத்தரசி திருமதி டான்.

மெண்டரின் பேசும் இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் தனது இருமொழித்திறன் போட்டித்தன்மையை இழக்கக்கூடும் என்று கூறி, மெண்டரின் மொழியைப் பயன்படுத்துமாறு ஊக்குவித்தார். இன்றைய மாறிவரும் சூழலில், பத்தில் எழு குடும்பங்களில், தொடக்கநிலை முதல் வகுப்பில் சேரும் பிள்ளைகள் வீட்டில் பிரதானமாக ஆங்கிலமே பேசுகின்றனர் என்றார் அவர்.

இந்திய-மலாய் கலப்பினத்தவரான 43 வயது திருவாட்டி நூர்கடிலா மரிக்காரும் அவரது இந்தியக் கணவரும், ஒன்பது, ஏழு வயதாகும் தங்களது மகன்களைப் பள்ளியில் மலாய் படிக்க வைக்கின்றனர்.

"தமிழ் எழுதுவது சற்று சிரமம். மலாய் சுலபமானது," என்றார் திருவாட்டி நூர்கடிலா. ஆயினும், அவரது மகன்கள் தங்களது தந்தைவழி பாட்டியிடம் தமிழிலும் தங்களது பெற்றோர்களிடம் மலாயிலும் பேசுகின்றனர்.

இந்தியரை மணம்புரிந்த திருவாட்டி சூ ஆன் சியாவின் இரு மகன்களும் தொடக்கப்பள்ளியில் சீனம் கற்கிறார்கள். அவரது கணவர் தனது குடும்பத்துடன் தமிழில் பேசினாலும், பள்ளியில் மலாய் படித்தார்.

"என்னால் பிள்ளைகளுக்கு சீனம் கற்றுத்தரமுடியும் என்பதால் இம்முடிவை எடுத்தோம்," என்றார் திருவாட்டி சூ. ஆயினும், அவரது மகன்கள் இந்தியக் கலாசாரத்தைப் பற்றி கற்றுக்கொண்டு, தீபாவளியைக் கொண்டாடி, இந்திய உணவையும் விரும்பி உண்பதாக அவர் சொன்னார்.

திருவாட்டி சிண்டி லியோங், தனது இரு பிள்ளைகளும் தங்களது மரபைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களை சீனம் கற்க வைத்தார். புதுடெல்லியில் பிறந்து, 1994ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய அவரது கணவரின் தாய்மொழி ஹிந்தி. பிள்ளைகள் சீனம் படிப்பதற்கு அவரது கணவரும் ஆதரவளித்தார். இருந்தாலும், தந்தையின் பாரம்பரியத்தை அவரது பிள்ளைகள் விட்டுக்கொடுக்கவில்லை. "எங்களுக்கு புதுடெல்லியில் உறவினர்கள் இருப்பதால் தீபாவளியை டெல்லியில் கொண்டாடுவது எங்கள் குடும்ப வழக்கம். எனது இந்திய உறவினர்கள் இந்துக்களாகவும் சீக்கியர்களாகவும் இருப்பதால், என் பிள்ளைகள் அடிக்கடி இந்தியக் கோயில்களுக்கும் செல்கின்றனர்," என்றார் அவர்.