"ஷெங் சியோங் அதிர்ஷ்டக் குலுக்கலில்" ஹுவாவெய் கைபேசி கிடைத்ததா? அது ஒரு மோசடி

"ஷெங் சியோங் அதிர்ஷ்டக் குலுக்கலில்" ஹுவாவெய் கைபேசி கிடைத்ததா? அது ஒரு மோசடி

1 mins read
b3ff1faf-26e6-4b13-a848-78bc9fdafb37
-
Google News Preferred Icon

ஷெங் சியோங் பேரங்காடியின் "ஆகஸ்ட் மாத அதிர்ஷ்டக் குலுக்கலில்" வெற்றி பெற்றிருப்பதாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுவரும் பொய்யான குறுந்தகவல் பற்றி பேரங்காடி குழுமம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) பொதுமக்களை எச்சரித்தது.

தேசிய குற்றத்தடுப்பு மன்றமும் இந்த மோசடி பற்றி ஃபேஸ்புக்கில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹுவாவெய் கைபேசி கிடைத்திருப்பதாக உறுதியளித்த அந்தக் குறுந்தகவலில் உள்ள இணைப்பை "கிளிக்" செய்யவேண்டாம் என மன்றம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறுகிறது.

குறுந்தகவலில் சொல்லப்பட்டுள்ளபடி எதுவும் செய்யவேண்டாம் என ஷெங் சியோங் அதன் இணையத்தளத்தில் ஆலோசனை கூறியது.

குறுந்தகவலின் இணைப்பை "கிளிக்" செய்வோர் ஓர் இணையத்தளத்துடன் இணைக்கப்படுவார்கள். அந்த இணையத்தளம், வாடிக்கையாளர்களைத் தங்களது கடன்பற்று அட்டையின் விவரங்களை உள்ளிடச் சொல்லும். அவ்வாறு செய்வோரின் கடன்பற்று அட்டைக்கு இந்த மோசடி இணையத்தளம் மாதந்தோறும் $120 சந்தாக் கட்டணம் விதிப்பதாக ஷெங் சியோங் தெரிவித்தது.

வாடிக்கையாளர்களுக்குத் தாங்கள் குறுந்தகவல்வழி தகவல் அனுப்புவதில்லை என பேரங்காடி குழுமம் தெரிவித்தது.

"எங்களது அதிர்ஷ்டக் குலுக்கலின் வெற்றியாளர்களிடம் கடன்பற்று அட்டை விவரங்கள் கேட்கப்படுவதோ அல்லது தனிப்பட்ட விவரங்களை நிரப்புவதற்கான இணைப்புகள் அனுப்பப்படுவதோ இல்லை," என்றது குழுமம்.

குழுமத்தின் அரையாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகஸ்ட் 3ஆம் தேதி முடிவடைந்ததாகக் குழுமம் உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்