சிங்கப்பூரில் அளவுக்கு அதிகமாகக் கணினி அல்லது திறன்பேசித் திரைகளைப் பார்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது.
அதை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்வியமைச்சு பள்ளி நேரங்களில் திறன்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை விதித்துள்ளது. ஜனவரியிலிருந்து நடப்புக்குவந்த அந்த நடைமுறையை நிபுணர்கள் பலர் வரவேற்கின்றனர்.
திரைகளில் அதிக நேரம் செலவிடுவது கல்வியாலோ குடும்பத்தினாலோ ஏற்படும் மன உளைச்சலின் வெளிப்பாடாகவும் இருக்கக்கூடும் என்று மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர்.
எனவே, திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது மட்டும் தீர்வாகாது. பிள்ளைகள் அதிகம் பெற்றோரிடம் பேசுவதும் அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிள்ளைகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று உணரும்போது திரைகளில் கூடுதல் நேரத்தை விரயமாக்குகின்றனர் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
பெற்றோரும் அவ்வப்போது அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதும் திரை நேரம் குறைய ஒரு தீர்வு என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

