மனநலக் கழகத்தில் (ஐஎம்எச்) தங்களை அறியாமல் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் நோயாளிகளைச் சமாளிக்க அங்குள்ள தாதியர்க்குப் பதற்றத்தைத் தணிக்கும் முறை, பேச்சுவார்த்தை நுட்பங்கள் போன்ற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த ஆறு மாதக் களப்பரிசோதனையில் நோயாளிகள் சிறப்பான முறையில் கையாளப்பட்டதால் நிலைமை கைமீறிப் போகாமல் தாதியர்மீதான உடலளவிலான தாக்குதல்களின் எண்ணிக்கையைக் கழகம் பாதியாகக் குறைத்துள்ளது.
மனநலச் சிகிச்சையின் தரத்தை உயர்த்தவும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும் ‘கோட் கிரே’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை 2027 டிசம்பருக்குள் தனது அனைத்து 40 வார்டுகளிலும் விரிவுபடுத்த மனநலக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில், ‘கோட் புளூ’ என்பது உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலையைக் குறிக்கிறது. அதேவேளையில், ‘கோட் கிரே’ என்பது ஒரு மனநல அவசரநிலையாகும்.
ஆயுதம் ஏதும் ஏந்தாமல், அதே நேரத்தில் முரட்டுத்தனமாக அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் ஒருவரைப் பாதுகாப்பாகக் கையாண்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
இந்தப் பயிற்சிக்கு தாதிமைத் துறை உதவி இயக்குநர் கலைவாணன் தக்ஷணாமூர்த்தி, 47, மூத்த தாதிமை மேலாளர் நிர்வாகி வின் மின் ஹடெட், 36, ஆகிய இரு முன்னணி ஊழியர்கள் தலைமை வகித்தனர்.
ஐஎம்எச் ஊழியர்கள் தினமும் தீவிர மனநலப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். இது சவாலானது என்றாலும் மனநிறைவு தரும் ஒரு பணி என்று அவர்கள் கூறினர்.
நோயாளிகளின் உடல்நிலை திடீரென மோசமடையும்போது, அவர்கள் தங்கள் சொந்த நிலையைப் பற்றி முழுமையாக உணராமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இது விரைவாக முரட்டுச்செயலாக மாறக்கூடும்.
“தாதியர் பலவிதமான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதில் ஒன்று, தங்கள் பேச்சாற்றல் மூலம் பதற்றத்தைத் தணிக்கும் திறன்களைப் பயன்படுத்தி, நோயாளியை அமைதிப்படுத்துவது. அந்தச் சிக்கலான சூழ்நிலையின் முடிவில் நோயாளியைக் கட்டுப்படுத்த முடிந்தால், அதுவே வெற்றிகரமான பதற்றத்தைத் தணிக்கும் செயலாகும்,” என்று கலைவாணன் தெரிவித்தார்.
கழகத்தின் அனைத்து மருத்துவ ஊழியர்களும் மூன்று நாள் நிலையான ‘பராமரிப்பு மற்றும் பதிலளிப்பு’ பயிற்சித் திட்டத்தை மேற்கொள்கிறார்கள். அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள்வதற்கான திறன்களையும் அறிவையும் அவர்கள் கொண்டுள்ளனர்.
ஐஎம்எச், 2025 ஜனவரியிலிருந்து ஜூலை வரை ஆறு மாத முன்னோடித் திட்டத்தை நடத்தியது. இதில் பதிவு செய்த இருபது தாதியர், அவர்களின் ஆளுமை, தனிநபர் தொடர்புத் திறன்கள், மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ‘கோட் கிரே’ பயிற்சிக்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


