சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பத்து பள்ளிகள் மாணவர்கள் தங்கள் திறன்பேசிகளைப் பூட்டிவைப்பதற்காகப் பெட்டகங்களை (locker) இவ்வாண்டு அறிமுகம் செய்துள்ளன.
பள்ளி நேரங்களின்போது மாணவர்கள் தங்கள் திறன்பேசிகளைப் பெட்டகங்களில் பூட்டிவைப்பர்.
பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே இருக்கும் பொதுவான பெட்டகங்களில் மாணவர்கள் வழக்கமாகப் பள்ளிப் புத்தகங்கள் போன்றவற்றை வைத்துக்கொள்வர். அதை மாணவர்களே பார்த்துக்கொள்வர்.
ஆனால், திறன்பேசிகளுக்கான பெட்டகங்களை ஆசிரியர்கள் கவனித்துக்கொள்வர்.
கடந்த ஆண்டு நவம்பரில் மாணவர்களின் திறன்பேசிகளின் பயன்பாடு குறித்து கல்வியமைச்சு புதிய வழிகாட்டிகளை அறிவித்தது.
இதற்குமுன் பாட நேரங்களில் மட்டும் மாணவர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. சிற்றுண்டி அல்லது ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நடப்புக்கு வந்த கடுமையான கட்டுப்பாடுகளை அடுத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாட நேரம் அல்லாத சமயங்களிலும் திறன்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
அதாவது சிற்றுண்டி நேரங்கள், வகுப்புகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்கள், இணைப் பாட வகுப்புகள் நடைபெறும் நேரங்கள் ஆகியவற்றிலும் மாணவர்கள் திறன்பேசிகளை அறவே பயன்படுத்த முடியாது.
தொடர்புடைய செய்திகள்
செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியில், வளாகத்துக்குள் வரும் மாணவர்களிடம் திறன்பேசிகளை அணைத்துவிடும்படி வாசலிலேயே பாதுகாவலர் கூறிவிடுவார்.
அதன்பின் திறன்பேசிகள் வகுப்பறைகளுக்கு வெளியில் உள்ள பெட்டகங்களில் பூட்டிவைக்கப்படுகின்றன.
பெற்றோர் சிலர் இந்தப் புதிய நடைமுறையைப் பெரியளவில் வரவேற்றுள்ளனர்.
சிற்றுண்டி நேரங்கள் நண்பர்களுடன் செலவிடுவதற்கான தருணங்கள் என்ற சில பெற்றோர், திறன்பேசி போன்ற சாதனங்களிலிருந்து ஓய்வெடுக்க உதவுகின்றன என்றனர்.
செயிண்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களைத் தொடர்புகொள்ள பெற்றோர் பள்ளியின் அவசர எண்ணுக்கு நேரடியாகத் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வகுப்பு நேரங்களின்போது திறன்பேசிகளைச் சாதாரண பெட்டகங்களிலும் மாணவர்களின் பள்ளிப் பைகளிலும் வைத்திருக்கும்படி கல்வியமைச்சு அறிவுறுத்துகிறது.
இருப்பினும், ஒரு சில பள்ளிகள் திறன்பேசிகளைப் பூட்டி வைப்பதற்கான சிறப்புப் பெட்டகங்களை நாடியுள்ளன.
சிடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஹை சிங் கத்தோலிக்கப் பள்ளி, அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளி, ஹில்குரோவ் உயர்நிலைப் பள்ளி ஆகியவை அவற்றுள் சில.
அலுவலகத்திற்குத் தேவையான அலமாரிகள் போன்ற பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ‘வடி-லிங்ஸ்’ (Wide-Links) நிறுவனம், கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட 40க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களுக்குத் திறன்பேசிகளைப் பூட்டி வைக்கும் பெட்டகங்களை விநியோகம் செய்ததாகக் குறிப்பிட்டது.
அத்தகைய பெட்டகங்களை மின்னிலக்க எண்கள் மூலம் அல்லது ஸ்மார்ட் கார்ட்ஸ் அட்டைகள் மூலம் இயக்க முடியும். ஆசிரியர்களுக்கு மட்டுமே பெட்டகங்களை இயக்க பள்ளிகள் அனுமதிக்கின்றன.

