ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ‘அறிவார்ந்த’ தள்ளுவண்டி

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ‘அறிவார்ந்த’ தள்ளுவண்டி

2 mins read
471b8269-ecf5-4c81-bc68-ecc99f4def98
சிங்கப்பூரில் உள்ள 48 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் அறிவார்ந்த தள்ளுவண்டிகளைப் பயன்படுத்தலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள 48 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் இவ்வாண்டு இறுதிக்குள் அறிவார்ந்த தள்ளுவண்டிகளை எதிர்பார்க்கலாம்.

விவோசிட்டி, ஜூவல் சாங்கி விமான நிலையம், நெக்ஸ், ஜங்‌‌ஷன் 8, பிடோக் கடைத்தொகுதி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் 1,300க்கும் அதிகமான அறிவார்ந்த தள்ளுவண்டிகளைப் பயன்படுத்த முடியும்.

பொங்கோலில் முதலில் சோதிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் கார்ட்’ என்ற அறிவார்ந்த தள்ளுவண்டி திட்டம், பிற ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

பேரங்காடியில் பொருள்களை வாங்கிவிட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த நீண்ட வரிசைகளில் நிற்கத் தேவையிருக்காது.

அவர்கள் தள்ளுவண்டிகளில் உள்ள தொழில்நுட்ப அம்சம்வழி பொருள்களுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு வெளியேறலாம்.

ஃபேர்பிரைஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்தலாம்.

அறிவார்ந்த தள்ளுவண்டிகளில் தொடுதிரைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பேரங்காடிகளின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல எளிமையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய தள்ளுவண்டிகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் மூலம் பொருள்களை வாங்கிய பிறகு 36 வினாடிகளுக்குள் பொருள்களுக்குக் கட்டணம் செலுத்திவிட்டு பேரங்காடியிலிருந்து வாடிக்கையாளர்களால் வெளியேற முடிந்தது.

ஃபேர்பிரைஸ் செயலி மூலம் எளிதாகக் கட்டணம் செலுத்துதல்

காசாளர்களிடம் நீண்ட வரிசைகளில் நின்று பணம் செலுத்த தேவையில்லாததால் பேரங்காடிகளிலிருந்து விரைவாக வெளியேற முடிந்ததாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டனர்.

அறிவார்ந்த தள்ளுவண்டிகளின் கைப்பிடிகளில் உள்ள சிறப்பம்சம் வழி பொருள்களின் விலைப்பட்டியலை ஸ்கேன் செய்துகொள்ள முடியும்.

பேரங்காடிகளில் கழிவு விலைகளில் விற்கப்படும் பொருள்கள் குறித்த விவரங்களையும் கைப்பிடிகளில் உள்ள தொடுதிரைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

எந்தப் பொருள் எந்த வரிசையில் இருக்கிறது போன்ற தகவல்களையும் அறிவார்ந்த தள்ளுவண்டியில் உள்ள தொடுதிரைகள் தருகின்றன.

அறிவார்ந்த தள்ளுவண்டியை ஃபேர்பிரைஸ் செயலி மூலம் பயன்படுத்த முடியும்.
அறிவார்ந்த தள்ளுவண்டியை ஃபேர்பிரைஸ் செயலி மூலம் பயன்படுத்த முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமேசான், வால்மார்ட், க்ரோகர் உள்ளிட்ட பெருகிவரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மளிகை சில்லறை விற்பனையாளர்கள் அறிவார்ந்த தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் பல, பணம் செலுத்துதல் உட்பட ஒரே மாதிரியான செயல்பாடுகளை வழங்குகின்றன.

பயனீட்டாளர் சில்லறை விற்பனைப் பயணத்தை மறுவடிவமைப்பதற்கான பல்பொருள் அங்காடிச் சங்கிலியின் பல மில்லியன் டாலர் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஃபேர்பிரைஸ் குழுமம் 2025ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சோதனை செய்துவரும் 60க்கும் மேற்பட்ட புதிய மின்னிலக்கத் தீர்வுகளில் இந்த அறிவார்ந்த தள்ளுவண்டியும் ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்