வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதாக அறுவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த அறுவரும் ஒரே நாளில், ஒரே நேரத்தில், வேக வரம்பைப்போல் இரட்டிப்பு வேகத்தில் கார் ஓட்டியது விசாரணையில் தெரியவந்தது.
ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிய மத்திய விரைவுச்சாலையில் அவர்கள் தங்கள் வேகத்தைக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் அனைவரும் புதன்கிழமை (மார்ச் 11) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
லீ ஜுன் என் கில்விஸ், 23, மார்க்கஸ் லாவ் யோங் வெய், 35, ஷெர்மன் குவா கோக் ரோங், 21, கோ ஜேரட் கேன், 25, ஆகிய நால்வரும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகச் சொல்லப்படுகிறது.
டேமியன் சியா ஹுவா சுவான், 29, கோங் ஜியா குவான், 23, என்ற மற்ற இருவர்மீதும் அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி, காயம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் அறுவரும் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், அவர்கள் அனைவர்க்கும் வாகனம் ஓட்ட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் 201,358ஆகப் பதிவான வேக வரம்பு மீறல்களின் எண்ணிக்கை 2025ல் 253,550ஆக உயர்ந்ததாகப் போக்குவரத்துக் காவல்துறையின் ஆண்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதாவது, சென்ற ஆண்டு வேக வரம்பை மீறியதற்காக நாளொன்றுக்குச் சராசரியாக 695 பேர் பிடிபட்டனர்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுபவர்க்கு $5,000 வரை அபராதம், ஓராண்டுவரை சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி, காயம் விளைவிப்பவர்க்கு $10,000 வரை அபராதம், ஈராண்டுவரை சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

