சிங்கப்பூரில் அஞ்சலகச் சேவைகளை வழங்கும் சிங்போஸ்ட்டின் நிகர லாபம் செப்டம்பர் 30 வரையிலான இவ்வாண்டின் முதல் பாதியில் 12.8 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது.
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் திங்கட்கிழமை ( நவம்பர் 10) அன்று தாக்கல் செய்த ஆவணத்தில் இந்த விவரங்களை சிங்போஸ்ட் தெரிவித்தது.
நிகர லாபம், 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் $22.6 மில்லியனிலிருந்து $19.7 மில்லியனுக்குக் குறைந்தது.
ஆண்டு அடிப்படையில் வருவாயும் 27.4 விழுக்காடு சரிந்தது. முந்தைய ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வருவாய் 259.6 மில்லியனாக இருந்தது. இது, தற்போது 188.4 மில்லியன் வெள்ளிக்குக் குறைந்தது.
“இந்தச் சரிவு, தளவாடத் தொழிலில் உள்ள சவால்களைக் காட்டுகிறது. குறிப்பாக எல்லை தாண்டிய மின் வர்த்தகத்தின் அளவை பிரதிபலிக்கிறது,” என்று சிங்போஸ்ட் தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
லாபத்தில் ஏற்பட்ட சரிவுக்கு, விற்கப்பட்ட ஆஸ்திரேலிய வணிகத்தின் பங்களிப்பு இல்லாதது முக்கியக் காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
சிங்போஸ்ட் ஆஸ்திரேலியா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், சரக்கு அனுப்பும் நிறுவனமான ஃபேமஸ் ஹோல்டிங்ஸ், ரோட்டர்டாம் ஹார்பர் ஹோல்டிங்ஸ், குவாண்டம் சொல்யூஷனின் துணை நிறுவனங்கள் ஆகியவை சிங்போஸ்ட்டின் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளில் அடங்கும்.
சிங்போஸ்ட்டின் தலைமை நிர்வாகியாக நவம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்ற மார்க் சோங், “எங்கள் முதல் பாதி ஆண்டின் செயல்திறன் எங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது," என்றார்.
"உலகம் முழுவதும் மின்வர்த்தகம், தளவாடத் தொழில்துறை பலவீனமாக இருந்தாலும் நிறுவனத்தின் குழுவினர் இவ்வாண்டின் முதல் பாதியில் ஆக்ககரமான தொடக்கத்தை வழங்கியிருக்கின்றனர். எங்கள் சேவைத் தரத்தை மேலும் மேம்படுத்த எங்களுடைய உள்கட்டமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்வோம்," என்றார் அவர்.
செப்டம்பர் 30 வரையிலான இவ்வாண்டின் முதல் பாதிக்கு ஒரு சாதாரண பங்குக்கு இடைக்காலமாக 0.08 ஈவுத் தொகையை சிங்போஸ்ட் இயக்குநர் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொகை டிசம்பர் 5ஆம் தேதி வழங்கப்படவிருக்கிறது.

