சிங்பாஸ் சேவை முடங்கி மீண்டது

சிங்பாஸ் சேவை முடங்கி மீண்டது

2 mins read
85a954be-6d87-4886-978f-2f749efa9b79
இடைக்கால சிங்பாஸ் சேவை இடையூறு காரணமாக இதர அரசாங்க இணையச் சேவைகளையும் எட்டமுடியாமல் போயிற்று. படங்கள்: சாரா கோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்பாஸ் கட்டமைப்பின் சேவை இன்று நான்கு மணி நேரம் செயலிழந்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட $300 சிடிசி (சமூக மேம்பாட்டு மன்ற) பற்றுச்சீட்டுகளை சிங்பாஸ் பயன்படுத்திப் பெற முயன்ற சிங்கப்பூரர்களுக்கு அவை அந்த நேரத்தில் கிடைக்கவில்லை.

சிடிசி பற்றுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் மஞ்சள் நிறத்தில் ஓர் அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றது.'பின்னர் முயற்சி செய்யவும்' என்று அந்த அறிவிப்பு கூறியது.

யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் go.gov.sg/cdcv என்ற இணையத் தளத்திற்குச் சென்று அவருடைய சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம் என்பது ஏற்பாடு.

அப்படிச் செய்ததும் பற்றுச்சீட்டு இணைப்பு ஒன்று பதிவுபெற்ற அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். அதை இதர குடும்ப உறுப்பினர்களுடன் அவர் பகிர்ந்துகொள்ளலாம்.

சிங்பாஸ் முறையை நிர்வகித்து நடத்தி வரும் அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech) ஃபேஸ்புக்கில் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

சிங்பாசைப் பயன்படுத்தி மின்னிலக்கச் சேவைகளைப் பெறுவதில் பிரச்சினை இருப்பதாக அது ஒப்புக்கொண்டது. முன்னதாக, 2.50 மணியளவில் டுவிட்டரிலும் அது இதே தகவலை வெளியிட்டது.

சிங்பாஸ் கைப்பேசி செயலியிலும் சேவை இடையூறு பற்றிய தகவல் காணப்பட்டது.

இடைக்கால சிங்பாஸ் சேவை இடையூறு காரணமாக இதர அரசாங்க இணையச் சேவைகளையும் எட்டமுடியாமல் போயிற்று.

கடைசியாக பிற்பகல் சுமார் 4 மணிக்கு குறைபாடு சரிபடுத்தப்பட்டுவிட்டதாக அந்த முகவை ஃபேஸ்புக்கில் அறிவித்தது.

நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் ஏற்பட்ட இடையூறுகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் முகவை தெரிவித்தது.