சிங்பாஸ் முறைகேடு: போலி நிறுவனங்கள் உருவாக்க உதவிய 15 பேர் கைது

சிங்பாஸ் முறைகேடு: போலி நிறுவனங்கள் உருவாக்க உதவிய 15 பேர் கைது

2 mins read
சிங்பாஸ் மறைச்சொல்லைப் பகிர்ந்ததால் பல மோசடிகள் அரங்கேறின
e37d4b4e-0a73-4dc6-be26-6b19c76c64dd
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் போலி நிறுவனங்களை உருவாக்கி, சட்டவிரோதமாக வேலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற மோசடிக் கும்பலுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் 15 சிங்கப்பூரர்கள்மீது புதன்கிழமை (ஏப்ரல் 29) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்களில் 14 ஆடவர்களும் ஒரு மாதும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக் கும்பலால் அவர்கள் நேரடியாகவோ, டெலிகிராம் செயலியின் மூலமோ குற்றங்களைச் செய்ய ஆள் சேர்க்கப்பட்டனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு சிங்பாஸ் மறைச்சொல்லை அவர்கள் மோசடிக் கும்பலிடம் பகிர்ந்ததால் பல்வேறு மோசடிக் குற்றங்கள் நடந்துள்ளன. அதன் விவரங்களை காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டோரில் 34 வயது லின் சிம் வெய் லிங் என்ற மாது போலியான நிறுவனம் தொடங்குவதற்கு சிங்பாஸ் மறைச்சொல்லை அடையாளம் தெரியாதவரிடம் பகிர்ந்தார். அதன்வழியாக வர்த்தக நிறுவனப் பதிவு தளத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டது. மேலும் வேலையில் அமர்த்தாத அறுவருக்கு வேலை அனுமதி அட்டையை அம்மாது பெற்றுத் தந்தார்.

அடையாளம் தெரியதவரிடம் சிங்பாஸ் மறைச்சொல்லைப் பகிர்ந்தது, வர்த்தகப் பதிவு தளத்தில் போலிப் பரிவர்த்தனைக்கு உதவியது, வேலை அனுமதி அட்டையை தேவையில்லாமல் பெற்றது ஆகிய மூன்று குற்றங்களை அவர் எதிர்நோக்குகிறார்.

இதேபோன்று குற்றஞ்சாட்ட ஆடவர்கள் மீது, மறைச்சொல்லைப் பகிர்ந்து, அடையாளம் அறியப்படாதோர் அவற்றைப் பயன்படுத்த அனுமதித்த குற்றங்கள் சுமத்தப்பட்டன.

அவர்கள் இவ்வாண்டு மே மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

சிங்பாஸ் மறைச்சொல்லை பகிர்ந்து, மோசடிக் குற்றங்களுக்குத் துணைபுரிவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்
மோசடிசிங்பாஸ்காவல்துறைநீதிமன்றம்குற்றச்செயல்கும்பல்