இளையர் கைகளில் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம்

இளையர் கைகளில் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம்

2 mins read
- சிவாணி சக்திவேல்
03c28ac9-8957-43ef-aa62-2fe079d5ffc5
நல்லிணக்கத்திற்காகக் குரல் கொடுக்கும் இளம் பேராளர்களுடன், கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையத் ஹருன் அல்ஹப்சி உரையாடினார். - படம்: சிவாணி சக்திவேல்
Google News Preferred Icon

மனம் திறந்து பேசி, ஆழமான புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க முடியும் என்பதை இளையர்களுக்கான ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ ஹார்மனி சாம்பியன்ஸ் திட்டம் 2026 எடுத்துரைத்துள்ளது.

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நல்லிணக்க அமைப்பு, தெமாசெக் அறநிறுவனம், ‘ரீச் சிங்கப்பூர்’ ஆகியவற்றின் ஏற்பாட்டில் இத்திட்டத்தை ஒட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்றது.

‘தெமாசெக் அறநிறுவனம் – ரோசஸ் ஆஃப் பீஸ் ஹார்மனி சேம்பியன்ஸ்’ என்ற அந்தத் திட்டம் மூன்றாவது ஆண்டாக இம்முறை நடந்தேறியுள்ளது.

தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என 11 உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 45 இளையர்கள் நல்லிணக்கத்திற்குக் குரல் கொடுக்கும் பேராளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், சமயப் புரிதலை மேம்படுத்தும் சுற்றுலாப் பயணங்கள், கலந்துரையாடல்கள், செயல்வழி கற்றல் திட்டங்கள் போன்றவற்றின் வாயிலாக, சிங்கப்பூரர்களிடையே பிணைப்புகளை வலுவாக்கும் முயற்சிகளில் இந்த இளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இளையர்கள் தங்களது கல்வி நிலைய வளாகங்களிலும் சமூகத்திலும் இன, சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டும் திட்டங்களை முன்னின்று நடத்துவார்கள் என்று ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

2023இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 180க்கும் மேற்பட்ட இளையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையத் ஹருன் அல்ஹப்சி, இளையர்களுக்கான நியமனச் சான்றிதழ்களை வழங்கினார்.

இன, சமய விவகாரங்கள் குறித்துக் குரல் எழுப்பாமல் இருப்பது நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் என்ற கருத்து தவறு என்று டாக்டர் அல்ஹப்சி நிகழ்ச்சி மேடையில் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

“நேர்மையான கலந்துரையாடலின் மூலம் மட்டுமே வேற்றுமைகளுக்கு இடையில் உண்மையான ஒற்றுமையைக் காணலாம்,” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பது எப்படி என்பதைப் பற்றிய அந்தக் கலந்துரையாடலில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்ற உறுப்பினர் ஹபீப் ஹசான் அல்-அத் தாஸ், சிங்கப்பூரின் யூத சமயத் தலைவரான ரேபாய் மோர்டெகாய் அபெர்கெல் ஆகியோருடன் கிறிஸ்தவ, பௌத்த, தாவோயிசச் சமயத் தலைவர்களும் இணைந்து சிங்கப்பூரில் சமூக நல்லிணக்கம் தொடர்ந்து நீடிக்க சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் திடீரென உருவாகவில்லை என்றும் அது நம் முன்னோடிகளின் கடின உழைப்பால் மலர்ந்த சமூகப் பிணைப்பு என்றும் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நிறுவனரும் தலைவருமான முகம்மது இர்ஷாத் நினைவூட்டினார்.

“நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறையினரிடையே தொடர்ந்து இட்டுச் செல்வது நமது பொறுப்பாகும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
இனம்நல்லிணக்கம்சமூகம்சிங்கப்பூர்இளையர்