சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சி: எம்விபி

2 mins read
0de1f582-ee14-45f2-8c35-e165ae48888e
எம்விபி, அடுத்த பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று திரு சியா யுன் காய் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆக மதிப்புமிக்க கட்சி எனும் பொருள் கொண்ட ‘மோஸ்ட் வேல்யூபல் பார்ட்டி’ (எம்விபி), சிங்கப்பூரின் ஆகப் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

விண்ணப்பித்து எட்டு மாதத்திற்குப் பிறகு, அக்கட்சிக்கு அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

அதையும் சேர்த்து இங்குப் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 21க்கு உயர்ந்துள்ளது.

அரசிதழில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) வெளியிடப்பட்ட அறிக்கையில், அதே நாள், சங்கங்கள் பதிவகத்தின்கீழ் கட்சி பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கட்சியை நிறுவியவர் உணவக உரிமையாளரான 32 வயது திரு சியா யுன் காய். கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது திரு சியா களத்தில் அடியெடுத்துவைத்தார்.

கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டதை வரவேற்ற திரு சியா, அதனால் சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்திருப்பதாகச் சொன்னார். கட்சியில் அதிகமானோர் சேர்வர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாண்டுத் தேர்தலில் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின்கீழ் அவர் போட்டியிட்டார்.

கூட்டணியில் சிங்கப்பூர் நீதிக் கட்சியும் சிங்கப்பூர் மலாய் தேசிய அமைப்பும் இடம்பெற்றிருந்தன. மக்கள் செயல் கட்சிக்கு எதிராக அந்தக் கூட்டணி, 32.24 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.

 திரு சியா, அப்போது சிங்கப்பூர் நீதிக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். தேர்தலுக்குப் பிறகு, அவர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

கட்சியில் இப்போது எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் யார் யார் என்பதையும் திரு சியா சொல்ல மறுத்துவிட்டார். எம்விபி, அடுத்த பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்