சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் கடந்த ஆண்டு தணிந்தபோதும் டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததாக அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்த 2025ஆம் ஆண்டுக்கும் தனியார் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றைச் சேர்க்காமல் மதிப்பிடப்பட்ட மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 0.7 விழுக்காடு இருந்தது. 2024ஆம் ஆண்டு அது 2.8 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டின் மூலாதாரப் பணவீக்கம் நிபுணர்கள் முன்னுரைத்த 0.5 விழுக்காட்டைவிட அதிகமாகப் பதிவானது.
இதற்கிடையே, ஒட்டுமொத்த பணவீக்கம் சராசரியாக 0.9 விழுக்காடானது. அதற்கு முந்தைய ஆண்டு அது 2.4 விழுக்காடாக இருந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இணைந்து அறிக்கை வெளியிட்டன.
கடந்த ஆண்டு டிசம்பரில் மூலாதாரப் பணவீக்கம் 1.2 விழுக்காடாகப் பதிவானது. 2024 டிசம்பரைவிட அது அதிகம். ஒட்டுமொத்த பணவீக்கமும் கடந்த ஆண்டு 1.2 விழுக்காடாகப் பதிவானது. இரண்டு விகிதத்திலும் நவம்பர் மாதத்தில் மாற்றம் இல்லை.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய வாரியமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன.
ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என்று கூறிய அவை, உறுதியாகக் குறிப்பிடவில்லை என்றபோதும் பணவீக்க முன்னுரைப்பு நிச்சயமற்ற சூழலைப் பொறுத்து அமையும் என்றன.
சிங்கப்பூரின் இறக்குமதி விலைகளும் தொடர்ந்து வீழ்ச்சி காணும் என்று அமைச்சுகள் கூறின. அனைத்துலக கச்சா எண்ணெய் விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வட்டார ரீதியிலான பணவீக்கம் மிதமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உள்நாட்டில் உற்பத்தி வளர்ச்சியடைவதால் ஊழியர் செலவினமும் அதிகரிக்கும். தனியார் பயனீட்டுக்கான தேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்புநோக்க டிசம்பர் மாதத்தில் உணவு, சேவைகள், தங்குமிடம் தொடர்பான விலைவாசியில் மாற்றம் எதுவும் இல்லை.

