சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி மார்ச் மாதம் 15.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
பிப்ரவரியில் பதிவான 4 விழுக்காட்டைக் காட்டிலும் இது சிறப்பான வளர்ச்சியாகும். அத்துடன், மார்ச் மாத ஏற்றுமதி 8.1 விழுக்காட்டைத் தொடும் என்னும் புளூம்பெர்க்கின் கணிப்பையும் அது மிஞ்சிவிட்டது.
பிப்ரவரி இறுதியில் ஈரான் போர் தொடங்கியபோதிலும், ஏற்றுமதி வளர்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. அந்த வகையில் இது ஏழாவது மாதத் தொடர் ஏற்றம்.
செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கு நீடிக்கும் வலுவான தேவை மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் உயர்ந்தது.
ஆண்டு அடிப்படையில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 74 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் ஏற்றுமதி 9.6 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி மாத ஏற்றுமதியுடன் இறக்குமதியும் அதிகரித்ததால் மொத்த வர்த்தகம் 38.5 விழுக்காடு விரிவடைந்தது.
மின்னணு சாரா ஏற்றுமதி 0.6 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. ஆயினும், பிப்ரவரியுடன் ஒப்புநோக்க இது ஒரு சிறிய இறக்கம்தான். பிப்ரவரியில் மின்னணு தொடர்பில்லாத பொருள்களின் ஏற்றுமதி 6.9 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது.
சிங்கப்பூரின் ஏற்றுமதி மிகச் சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பது குறித்துப் பொருளியல் நிபுணர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
யுஓபியின் இணைப் பொருளியல் நிபுணர் ஜெஸ்டர் கோ கூறுகையில், “மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்திற்கான அறிகுறிகள் இதுவரை குறைவாகவே உள்ளன. மார்ச் மாத வர்த்தகத் தரவுகளில் அவை இன்னும் வெளிப்படவில்லை,” என்றார்.
“பெட்ரோல் ரசாயன ஏற்றுமதியின் சரிவு சற்றுக் குறைவான அளவிலேயே நிகழ்ந்துள்ளது. எண்ணெய் இறக்குமதியின் அளவிலும் சிறிய இறக்கமே காணப்படுகிறது,” என்றார் அவர்.
இருப்பினும், போரின் தாக்கத்தை ஏப்ரல் அல்லது பெரும்பாலும் மே மாதத் தரவுகள் துல்லியமாக மதிப்பிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேபேங்க் ஆய்வாளர்களான சுவா ஹக் பின் மற்றும் பிரையன் லீ கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு மீதான செலவினப் பெருக்கம் வளைகுடாப் போரால் பாதிக்கப்படவில்லை,” என்றனர்.
“மின்னணு ஏற்றுமதியில் கண்டுவரும் சிறப்பான செயல்பாடு, போர் காரணமாக மின்னணு அல்லாத பிரிவுகளில் ஏற்படும் சுமையை ஈடுசெய்ய உதவும்,” என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
மின்னணுப் பொருள்களுக்கான தேவை இவ்வாண்டின் முதல் பகுதியில் சிறப்பான அளவில் தொடரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

