சிங்கப்பூரின் ஏற்றுமதி, ஈரான் போருக்கு இடையிலும் ஏப்ரல் மாதம் தொடர்ந்து ஏற்றம் கண்டிருக்கிறது.
ஏற்றுமதி, தொடர்ந்து எட்டாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் (ஏப்ரல்) 24.5 விழுக்காடு கூடியது. மார்ச்சில், ஏற்றுமதியின் வளர்ச்சி 15.3 விழுக்காடு.
புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த வல்லுநர்கள் முன்னுரைத்த 11.6 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 66.7 விழுக்காடு கூடியது. மார்ச்சில் அது 73.9 விழுக்காடாக இருந்தது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த தேவைகள் கூடியதே அதற்கு முக்கியக் காரணம்.
மின்னணுப் பொருள்கள் தவிர்த்த மற்றவற்றின் ஏற்றுமதி கடந்த மாதம் 10.9 விழுக்காடு விரிவடைந்தது. மார்ச்சில் அது 0.6 விழுக்காடு சுருங்கியிருந்தது. ஏப்ரல் மாத வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மருந்தாக்கத் துறை. அதன் வளர்ச்சி மதிப்பு $0.8 பில்லியன்.
சென்ற ஆண்டு இறுதிக்குப் பிறகு, முதன்முறையாக மின்னணுப் பொருள்கள் தவிர்த்த மற்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக டிபிஎஸ் நிறுவனத்தின் பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்க வரிக் கொள்கைகளால் பல உலகநாடுகள் இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டது. தற்போதைய வலுவான வளர்ச்சியின் ஒரு பகுதி, அவற்றின் அடிப்படை விளைவுகளைப் பிரதிபலிப்பதாகப் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரின் 10 முக்கியச் சந்தைகளில் ஒன்பதுக்கு எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி ஏற்றங்கண்டது. இந்தோனேசியாவுக்கான ஏற்றுமதி மட்டும் 60.8 விழுக்காடு சரிந்தது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் 59.6 விழுக்காடு அதிகரித்தது. மருந்தாக்கப் பொருள்கள், வட்டு ஊடகக் கருவிகள், அளவீட்டுச் சாதனங்கள் முதலியவற்றுக்கான தேவை கூடியதே அதற்குக் காரணம்.
சீனாவுக்கான ஏற்றுமதி 37.8 விழுக்காடும் தென்கொரியாவுக்கான ஏற்றுமதி 71.2 விழுக்காடும் கூடின.
அடுத்த ஒருசில மாதங்களுக்கு, முக்கிய ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு மின்னணுப் பொருள்கள் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு சுவா சொன்னார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலக அளவில் முக்கியத்தும் பெற்றுவருகிறது. தரவு நிலையங்களிலும் அதிநவீனக் கணினியியலிலும் முதலீடுகள் கூடுகின்றன. இந்நிலையில், கணினிச் சில்லுகளுக்கும் தகவல் சேமிப்பகம் தொடர்பான கருவிகளுக்கும் அதிகத் தேவையிருப்பதாகத் திரு சுவா கூறினார்.

