மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் 11 கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என 211 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 33 தொகுதிகளில் 97 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன.
அவற்றில் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் ஐவர் எதிர்பாரா விதமாகப் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆக, மே 3ஆம் தேதி 32 தொகுதிகளில் 92 இடங்களுக்குப் போட்டி இருக்கும்.
இந்த முறை ஐந்து தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிலவுகின்றது.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி. அங்கு மக்கள் செயல் கட்சியை அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வழிநடத்த, பாட்டாளிக் கட்சி அணிக்கு ஃபைசல் மனாப் தலைமை தாங்குகிறார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் அங் மோ கியோ குழுத்தொகுதியில் முதன்முறையாக மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் ஐக்கியக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் பொருதுகின்றன.
செம்பவாங் குழுத்தொகுதியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தலைமையிலான மசெக அணியுடன் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அணிகள் மோதுகின்றன.
கடந்த தேர்தலில் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் மசெக அணியை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வழிநடத்தினார். இம்முறை அவர் சுவா சூ காங் குழுத்தொகுதி மசெக அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சுவா சூ காங்கில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துணைப் பிரதமர் கான் கிம் யோங் காலை 11.20 மணியளவில் யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
பாட்டாளிக் கட்சியின் சவாலைத் தடுக்க, பொங்கோல் குழுத்தொகுதியில் துணைப் பிரதமர் கான் களமிறங்குகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கடைசி நேரத்தில் தெம்பனிஸ் குழுத்தொகுதியிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் காணப்பட்டார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். அதே அரசியல் உத்தியை இம்முறையும் கையாண்டு எதிர்க்கட்சிகளை கடைசி நேரம் வரை திக்குமுக்காட வைத்துள்ளது மசெக.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதை வேட்புமனுத் தாக்கல் தினம் வரை காத்திருந்து அறிவித்ததும் பெரும் திருப்பமாக இருந்தது.

