இணைய விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடும் சிங்கப்பூர் இளையர்கள்

இணைய விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடும் சிங்கப்பூர் இளையர்கள்

2 mins read
87dd1662-e647-434c-82e9-eacea78c17b3
சிங்கப்பூர் இளையர்கள் அளவுக்கு அதிகமாக இணைய விளையாட்டுகளில் சிக்கியிருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாடுகளுடன் ஒப்புநோக்க சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் அளவுக்கு அதிகமாக இணைய விளையாட்டுகளில் சிக்கியிருப்பதாகவும் அதன் தொடர்பிலான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோவியல் துறை இணைப் பேராசிரியர் பீட்டர் சியூ நடத்திய ஆய்வில் இணைய விளையாட்டுகளுக்கு இளையர்கள் எந்த அளவு அடிமையாகின்றனர் என்பது ஆராயப்பட்டது.

அளவுக்கு அதிகமாக இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது மனநோயின் இரண்டு வகைப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய வட்டாரத்தில் 5.08 விழுக்காட்டினரும் ஐரோப்பாவில் 2.72 விழுக்காட்டினரும் இணைய விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

பேராசிரியர் சியூ, 18லிருந்து 40 வயதுக்கு உட்பட்ட 1,008 பேரிடம் ஆய்வை மேற்கொண்டார்.

அதே போல நடத்தப்பட்ட ஆய்வில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே பிரச்சினைக்குரிய இணைய விளையாட்டு விகிதம் 8.7 விழுக்காடாக இருந்தது. கல்லூரி மாணவர்களிடையே அது 15.4 விழுக்காடாக இருந்தது.

கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை இழப்பது, தனிமையில் இருக்க விரும்புவது ஆகியவை இணைய விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்துவதற்கான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டன.

ஆய்வில் ஈடுபட்டோர் 12 மாதங்களுக்கு விளையாட்டின்மீது ஏற்படும் ஆர்வம், மனநலம், தூக்கத்தின் தரம் ஆகியவற்றை பதிவிட்டனர்.

விளையாட்டின்மீது அளவுக்கு அதிகமாக ஈர்க்கப்பட்டோர் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது, இணைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது பற்றி அதிகம் சிந்திப்பது, பதற்றம், குறைவான தூக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டனர். மனஉளைச்சல், கவலை போன்றவை இணைய விளையாட்டுகளில் அதிகமானோரைத் தள்ளுவதாக நிபுணர்களும் இளையர்களுக்கான ஆலோசகர்களும் கூறினர்.

இணைய விளையாட்டுகளில் கிடைக்கும் வெகுமதிகள், விளையாட்டுகளின் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ஆகியவை இளையர்களை இணைய விளையாட்டுகள் பக்கம் அதிகம் ஈர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்