ஜோகூர் கடற்பால விபத்தில் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

ஜோகூர் கடற்பால விபத்தில் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

2 mins read
aedde32c-a2dd-480d-833e-91c919690dbd
கடற்பாலத்தின் மலேசியப் பகுதியில் உள்ள ஜாலன் தம்பாக் ஜோகூரில் விபத்து நிகழ்ந்தது. - படம்: அமிர் இஸ்மாயில்/ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: ஜோகூர் கடற்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரரான 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

புதன்கிழமை (மே 27) கடற்பாலத்தின் மலேசிய பகுதியான தாம்பாக் ஜோகூர் என்ற இடத்தில் அதிகாலை 3.20 மணிக்கு விபத்து நிகழ்ந்தது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அறிக்கையில் ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில் தாதியான அவர் ஜோகூரின் புக்கிட் சாகார் பகுதியிலிருந்து குடிநுழைவு சோதனைச் சாவடியை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.

கார்கள் வந்து கொண்டிருந்த பாதையில் அவர் தவறுதலாக நுழைந்துவிட்டார் என்று காவல்துறை கூறியது.

சுதாரித்துக் கொண்டு திரும்ப முயன்றபோது மோட்டார்சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் விலகிச்சென்று, பின்னர் சாலைத் தடுப்பில் மோதி, ஒரு கூர்மையான வளைவில் சறுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த மோதலில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து 10 மீட்டர் தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டார்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் லாரிகளுக்கான பாதையில் அவர் பலத்த காயங்களுடன் விழுந்துகிடந்தார். உடல் முழுவதும் வெட்டு, சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. அதே இடத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காகச் சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று கூறிய காவல்துறை, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகச் சொன்னது.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் விசாரணைக்கு உதவ முன் வருமாறு காவல்துறை கேட்டுக் கொண்டது. புலனாய்வு அதிகாரி டயாங் அஸிமா அவாங் சாபெலியை 017-3064779 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்