எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கச் சிங்கப்பூர் மின்சார நிறுவனங்கள் தயார்

எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கச் சிங்கப்பூர் மின்சார நிறுவனங்கள் தயார்

2 mins read
aeab1390-2c34-4b42-b54a-996649c1e317
மத்திய கிழக்கில் போர் மூண்டதிலிருந்து, சிங்கப்பூரில் மின்சாரத்தின் மொத்த விற்பனை விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிசக்தி விலை உயர்ந்து வரும் நிலையிலும், சிங்கப்பூரின் மின்சாரச் சில்லறை விற்பனையாளர்கள் அதனைத் திறம்பட எதிர்கொண்டு வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு எற்பட்ட நெருக்கடியைவிடத் தற்போதைய நிலையை அவர்கள் சிறந்த முறையில் கையாள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடு, இந்தத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன் காரணமாக, மின்சாரச் சில்லறை விற்பனையாளர்கள் ஏற்கெனவே தங்களின் மின்திட்டங்களில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின்போது, மின்சாரத்தின் மொத்த விற்பனை விலையில் ஏற்பட்ட கடும் மாற்றங்களால் சிங்கப்பூரில் ஆறு சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சந்தையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த 2023ஆம் ஆண்டு சில முக்கிய ஒழுங்குமுறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள பயனீட்டாளருக்கான தேவையில் குறைந்தது 80 விழுக்காட்டை 24 மாத காலத்திற்கு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். மேலும், அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படாத மீதமுள்ள மின்சாரத் தேவைக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செயல்திறன் பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்பன அவற்றில் அடங்கும்.

தற்போது சிங்கப்பூரின் மின்சாரச் சந்தையில் 10 சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட 590,000 வீடுகளுக்கும் (36%) 64,000 வர்த்தகப் பயனீட்டாளர்களுக்கும் (32%) மின்சாரம் வழங்கி வருகின்றனர்.

நிறுவனங்கள் தற்போதைய நிலையிலும் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வது, பல்வேறு மின் திட்டங்களை வழங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது அவை விலையேற்றத்தைத் தாங்கும் திறனுடன் இருப்பதைக் காட்டுவதாகப் பொருளியல் வல்லுநரும் த லான்டாவ் குழுமம் என்ற எரிசக்தி ஆலோசனை நிறுவனத்தில் பங்காளியுமான டேவிட் பிராட்ஸ்டாக் கூறினார்.

ஒருவேளை வருங்காலத்தில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என நிறுவனங்கள் கருதினால், தற்காலிகமாகப் புதிய வாடிக்கையாளர்களை ஏற்பதை அவை நிறுத்தக்கூடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்