ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்

ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்

2 mins read
e5c65948-e435-4b0c-9174-3a8e4063d432
உலக நாடுகளின் பட்டியலில் ஊழல் குறைந்த மூன்றாவது நாடு சிங்கப்பூர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன், உலக அளவில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திற்குத் தேர்வாகி உள்ளது.

இது 2025ஆம் ஆண்டின் நிலவரம். அதற்கு முந்திய ஆண்டிலும் இதே சிறப்புகளை சிங்கப்பூர் பெற்றிருந்தது.

‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ என்னும் லஞ்ச ஊழலுக்கு எதிரான உலகக் கண்காணிப்பு அமைப்பின் ஊழல் கண்ணோட்டக் குறியீடு உலகளாவிய ஊழல் நிலவர அறிக்கையை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்டது.

உலகில் லஞ்சமே இல்லாத சுத்தமான நாடு என்னும் சிறப்பைப் பெற 100 புள்ளிகளைப் பெறவேண்டும். 2025ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் சிங்கப்பூர் 84 புள்ளிகளைப் பெற்று உலக நாடுகளில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

89 புள்ளிகளைப் பெற்ற டென்மார்க் லஞ்ச ஊழலற்ற நாடாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. டென்மார்க் இந்த கௌரவ மதிப்பீட்டை தொடர்ந்து எட்டாவது ஆண்டாகப் பெற்றுள்ளது.

இரண்டாமிடத்தை 88 புள்ளிகளுடன் ஃபின்லாந்து பெற்றுள்ளது. சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் நியூசிலாந்து (81), நார்வே (81), சுவீடன் (80) ஆகியன உள்ளன.

பட்டியலில் பூஜ்யத்தைப் பெறும் நாடுதான் உலகிலேயே லஞ்ச ஊழல் மலிந்த நாடு ஆகும்.

கடந்த 2024ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் 84 புள்ளிகளைப் பெற்றிருந்தது. அதற்கு முந்திய ஆண்டில் அதற்குக் கிடைத்த புள்ளிகள் 83.

மேலும், அந்த ஆண்டில்தான் ஆசிய பசிபிக் வட்டாரத்திலேயே ஊழல் குறைந்த முதல் நாடு என சிங்கப்பூர் சிறப்பிக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்த சிங்கப்பூர் 2025ஆம் ஆண்டிலும் அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

உலக அளவில் சிங்கப்பூர் ஆக அதிகமான மதிப்பீட்டுப் புள்ளிகளை 2012ஆம் ஆண்டில் பெற்றது. அப்போது சிங்கப்பூருக்கு 87 புள்ளிகள் கிடைத்தன.

லஞ்ச ஊழலின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிடும் முறையை ‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ அந்த ஆண்டில்தான் மாற்றி அமைத்தது.

பொதுத் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் நிலவரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை நிபுணர்களும் வர்த்தகர்களும் கணிப்பதை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு 182 நாடுகளின் நிலவரம் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்