சிங்கப்பூரின் ஊழியர் சந்தை இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்து விரிவடைந்துள்ளது. வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு குறைந்துவருவது நிறுவனங்கள் சற்றுக் கவனத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது.
வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவும் பரந்துபட்ட அளவில் நிலையாகவும் இருக்கிறது.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதம் 2.1 விழுக்காட்டுக்குக் கூடியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான 2 விழுக்காட்டைவிட இது சற்று அதிகம்.
குடிமக்களைப் பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் 3.1 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது. ஒப்புநோக்க, முந்திய காலாண்டில் அது சற்றுக் குறைவாக 3 விழுக்காடாய் இருந்தது.
மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலைகளின் எண்ணிக்கை ஆண்டின் முதல் காலாண்டில் 5,000 கூடியது. வேலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தொடர்ந்து 18வது காலாண்டாக வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் கூடிய 2,300 வேலைகளைக் காட்டிலும் இது அதிகம். ஆயினும், சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வேலைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் மூன்று மாதத்தில் வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் 17,700 வேலைகள் அதிகரித்தன.
வளர்ச்சி மெதுவடைந்ததற்கு, ஊழியர்களுக்கான தேவை குறைந்தது முக்கியக் காரணமல்ல என்று அமைச்சு தெரிவித்தது. தற்போதைய சூழலும் முந்திய காலாண்டின் மிதமிஞ்சிய வளர்ச்சியுமே முக்கியக் காரணங்கள் என்று அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளிடையே வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி, போக்குவரத்து, கிடங்கு, நிர்வாக, சேவைத் துறைகளில் அதிகம் காணப்பட்டது.
சிங்கப்பூர்வாசிகள் அல்லாதோரிடையே வளர்ச்சி, கட்டுமானத் துறையில் கூடுதலாக இருந்தது. இருப்பினும் அது முந்திய காலாண்டைக் காட்டிலும் குறைவே.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 3,700. ஓராண்டுக்கு முன்னர் பதிவான 3,590ஐவிடவும் கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் பதிவான 3,690ஐக் காட்டிலும் அது அதிகம்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆட்குறைப்புக்கு ஆளானோரின் விகிதம் 1,000 ஊழியர்களுக்கு 1.5ஆக இருந்தது. முந்திய காலாண்டிலும் அதே நிலைதான்.
வேலைக்கு ஆள் எடுப்பதிலும் சம்பளத்தைக் கூட்டுவதிலும் நிறுவனங்கள் தொடர்ந்து கவனத்துடன் இருப்பது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் தெரியவந்ததாக அமைச்சு தெரிவித்தது.
அடுத்த மூன்று மாதங்களில் ஆள் எடுக்க எண்ணியிருக்கும் நிறுவனங்களின் விகிதம் குறைந்துள்ளது. பிப்ரவரியில் 54.6 விழுக்காடாக இருந்த அது, மார்ச்சில் 44.6 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த நினைத்திருக்கும் நிறுவனங்களின் விகிதமும் இறங்கியுள்ளது. பிப்ரவரியில் 39.3 விழுக்காடாக இருந்த அது, மார்ச்சில் 25.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
வேலைக்கு ஆள் எடுக்கும் மனப்போக்கைப் பொறுத்தவரை, மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைக்கு நிறுவனங்கள் இன்னும் திரும்பவில்லை என்று அமைச்சு சொன்னது.

