கரிம ஊக்கப் புள்ளி உடன்பாட்டில் கையெழுத்திட்ட சிங்கப்பூர், இந்தோனீசியா

கரிம ஊக்கப் புள்ளி உடன்பாட்டில் கையெழுத்திட்ட சிங்கப்பூர், இந்தோனீசியா

2 mins read
044384ef-10b4-49a7-a522-e093f90bd4a6
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற சிங்கப்பூர் - இந்தோனீசியா தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது. சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சரும் துணைப் பிரதமருமான கான் கிம் யோங் மற்றும் இந்தோனீசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் முகம்மது ஜும்ஹூர் ஹிதாயத் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். . - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையே பசுமை ஒத்துழைப்பை வலுப்படுத்த கரிம ஊக்கப் புள்ளி உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அவற்றின் பருவநிலை இலக்குகளை அடையும் நோக்கில், கரிம ஊக்கப் புள்ளி தொடர்பான புதிய புரிந்துணர்வுக் குறிப்பில் திங்கட்கிழமை (ஜூலை 6) கையெழுத்திட்டுள்ளன. இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற சிங்கப்பூர் - இந்தோனீசியா தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ முன்னிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சரும் துணைப் பிரதமருமான கான் கிம் யோங், இந்தோனீசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் முகம்மது ஜும்ஹூர் ஹிதாயத் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

பாரிஸ் உடன்படிக்கையின் ஆறாம் பிரிவின்கீழ், காடுகளைப் பாதுகாத்தல், கடலோர நிலப்பகுதிகளை மீட்டெடுத்தல் போன்ற சுற்றுச்சூழல் திட்டங்களுக்குப் பருவநிலை நிதியுதவியை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் இதன் மூலம் திட்டமிட்டுள்ளன.

இது தவிர சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எல்லை கடந்த வர்த்தகத்தை மேம்படுத்த, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் வர்த்தகச் செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் தளத்தில் இந்தோனீசிய மொழி வடிவம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்திச் சந்தை மற்றும் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் வர்த்தக உடன்பாடுகள் இறுதி செய்யப்படும் என்று இருநாடுகளின் அமைச்சர்களும் உறுதி செய்துள்ளனர். மேம்படுத்தப்பட்ட ஆசியான் பொருள் வணிக ஒப்பந்தத்தின்கீழ் கொண்டுள்ள கடப்பாடுகள் நிலைநாட்டப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் வரி இல்லா நடவடிக்கை, சுங்கத்துறை செயல்பாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, மின்னிலக்க வர்த்தகத்தை வழிநடத்துவது, ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை ஆகியவை இதில் அடங்கும்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் குறித்தும் அதன் காரணமாக உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதுள்ள தாக்கம் தொடர்பாகவும் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அக்கறை தெரிவித்தன.

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கடலோடிகள், வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இருநாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்