சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகக் கலை விழா: பலதரப்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகக் கலை விழா: பலதரப்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

2 mins read
4795169c-4d7b-4fca-9f50-b22ad155335e
ஏப்ரல் 17 முதல் மே 3 வரை நடைபெறவுள்ள இந்த விழா, மிடில் ரோட்டிலுள்ள கலைப்பள்ளியின் புதிய வளாகத்திலும் எஸ்பிளனேட் அரங்கிலும் நடைபெறும். - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்
Google News Preferred Icon

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், தனது 77ஆம் ஆண்டு நிறைவையொட்டி கலை விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏப்ரல் 17 முதல் மே 3 வரை நடைபெறவுள்ள அந்த விழா, மிடில் ரோட்டிலுள்ள அந்தக் கலைப்பள்ளியின் புதிய வளாகத்திலும் எஸ்பிளனேட் அரங்கிலும் நடைபெறும்.

நவரசங்களைக் கருவாகக் கொண்டு ‘முடிவில்லா ரசம்’ (Infinite Rasa) என்ற தலைப்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்குக் கிட்டத்தட்ட 15,000 பேர் வருகையளிப்பர் என எதிர்பார்ப்பதாக கழகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.

புதிய பள்ளி வளாகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கும் இந்த 17 நாள் விழாவை மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தொடக்கிவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

250க்கும் அதிகமானோர் பங்கேற்கும் இந்தக் கலை விழாவில் வளர்ந்து வரும் கலைஞர்கள் முதல் அனுபவமிக்க வல்லுநர்கள்வரை கலந்து கொள்கின்றனர்.

மேடைக்கலைகளுக்கான தளமாக இருப்பதுடன், மிடில் ரோட்டிலுள்ள பள்ளி வளாகம் பண்பாட்டு மையமாகவும் புத்துயிர் பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

ஓவியக் கலைக் கண்காட்சி, பல்லூடகக் கைவினை நிலையங்கள், உணவுக் கடைகள், சமூகச் சந்தை எனக் கலைப்பள்ளி களைகட்டவுள்ளது.

கலை விழாவின் முத்தாய்ப்பு அங்கமாக ‘பூமி: ஃபீல் த பீட்’ நிகழ்ச்சி எஸ்பிளனேட்டில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் ஓவிய இயக்குநர் சிக்கில் குருச்சரணின் வழிநடத்துதலில் கற்றுத் தேர்ந்த கழகத்தின் மாணவர்கள் நிகழ்ச்சி படைக்கவுள்ளனர்.

இந்திய நுண்கலைகளை தற்கால ரசனைக்கு ஏற்ற விதத்தில் அதன் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் சுவைக்க இந்தக் கலை விழா வாய்ப்பாக அமையும் என்று சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் தயாரிப்பு நிர்வாக இயக்குநர் மேனகா கோபாலன் தெரிவித்தார்.

“கலை விழாவின்வழி நாங்கள் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்து, தொடர்ச்சிக்கான பாதையை உருவாக்கியுள்ளோம்,” என்றார் அவர்.

இந்தியக் கலைகள் எல்லாரையும் சென்று சேர வேண்டும் எனத் தெரிவித்த திருவாட்டி மேனகா, வெளிப்புறக் கலையரங்கின் வழி நிகழ்த்துக் கலை அங்கங்களைப் பொதுமக்களிடம் படைத்துக் காட்ட கழகம் முயற்சி எடுப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்