எரிபொருள் கையிருப்புக்காக நிலத்தடிப் பகுதிகளை ஆராயும் அனுபவம் சிங்கப்பூருக்கு உள்ளது: டான் சீ லெங்

எரிபொருள் கையிருப்புக்காக நிலத்தடிப் பகுதிகளை ஆராயும் அனுபவம் சிங்கப்பூருக்கு உள்ளது: டான் சீ லெங்

2 mins read
3e215593-44f1-4682-ab02-2fde87017aab
ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி நிலையம். - படம்: சான் சுன் சிங் / ஃபேஸ்புக்

எண்ணெய்ச் சேகரிப்புக்காக அமைக்கப்பட்ட ‘ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி நிலையம்’ (Jurong Rock Caverns facility) சிங்கப்பூரில் இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் உள்ளது.

அதனையடுத்து தனது எரிபொருள் கையிருப்பை மேம்படுத்த நிலத்தடிப் பகுதிகளை ஆராயும் அனுபவம் இப்போது சிங்கப்பூருக்கு இருப்பதாக மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சி லெங் கூறியுள்ளார்.

‘ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி நிலையம்’, தென்கிழக்காசியாவின் முதல் வர்த்தக நிலத்தடி எண்ணெய்ச் சேகரிப்பு நிலையமாகும்.

நிலையத்திற்கு திங்கட்கிழமை டாக்டர் டான் நேரில் சென்றிருந்தார்.

அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14), நீண்டகாலத்துக்குத் திட்டமிடவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை சிங்கப்பூரிடம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக டாக்டர் டான் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

இத்தகைய கிடங்குகளில் கச்சா எண்ணெய் அல்லது இதர சம்பந்தப்பட்ட பொருள்களை சேகரித்து வைக்கலாம். அதன் மூலம் சிங்கப்பூரில் இயங்கும் எல்லா உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குமான எரிபொருள் சேமிப்பு வசதிகளை அதிகரிக்க முடியும் என்றார் டாக்டர் டான்.

மத்திய கிழக்குப் பூசலால் எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பூசல் ஓய்ந்தாலும்கூட எரிபொருள் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

‘ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி நிலையம்’, ஜூரோங் தீவு நிலத்தடியில் 150 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. அங்கு ஐந்து ‘கேவர்ன்ஸ்’ கிடங்குகள் உள்ளன.

அவற்றின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 1.47 மில்லியன் கன மீட்டர். கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய்யை அவற்றில் சேகரித்து வைக்க முடியும்.

நிலையத்தில் வைக்கப்படும் பொருள்கள் மாசுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய அவை பிரித்து வைக்கப்படவேண்டும் என்றும் டாக்டர் டான் விவரித்தார்.

தற்காப்பு அமைச்சரும் அரசாங்கச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங், 2014ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘ஜூரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி நிலையம்’, சிங்கப்பூரின் எதிர்காலத்துக்கான அரசாங்கத்தின் திட்டங்களில் அடங்கும் என்று மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்