சிங்கப்பூர் ஆலை உற்பத்தி 13% அதிகரிப்பு

சிங்கப்பூர் ஆலை உற்பத்தி 13% அதிகரிப்பு

2 mins read
9b03bd29-672a-4e1b-be20-bcafa06a0445
ஆலை ஒன்றில் வேலை செய்யும் ஊழியர். - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ஆலை உற்பத்தி கடந்த மே மாதம் ஆண்டு அடிப்படையில் 13 விழுக்காடு அதிகரித்தது.

இது, ஏப்ரல் மாதம் பதிவான 16.5 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகும். பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்தன.

கணிப்பைவிடக் குறைவு

இடைநிலை வளர்ச்சி விகிதம் 17.5 விழுக்காடாகப் பதிவாகும் என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் கணிக்கப்பட்டிருந்தது. தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் அதைக் கணித்திருந்தனர்.

அதிக மாற்றங்கள் இடம்பெறக்கூடிய உயிர் மருத்துவ உற்பத்தித் துறையைக் கருத்தில்கொள்ளாவிட்டால் ஆண்டு அடிப்படையில் ஆலை உற்பத்தி 17.7 விழுக்காடு கூடியது. ஏப்ரல் மாதத்தில் அவ்விகிதம் 20.2 விழுக்காடாகப் பதிவானது.

எனினும், பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி மே மாதம் 0.7 விழுக்காடு சுருங்கியது. ஏப்ரலில் ஆலை உற்பத்தி 6.2 விழுக்காடு கூடியிருந்தது.

அதேவேளை, உயிர் மருத்துவ உற்பத்தித் துறை கருத்தில்கொள்ளப்படாதபோது மே மாதம் பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி 3.1 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதம் வளர்ச்சி விகிதம் 6.3 விழுக்காடாக இருந்தது.

உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை மின்னணுப் பொருள்கள், துல்லியப் பொறியியல், பொது உற்பத்தி ஆகிய பிரிவுகளில் வளர்ச்சி பதிவானது. மற்ற பிரிவுகள் சுருங்கின.

மின்னணுப் பொருள்கள் பிரிவில் நல்ல வளர்ச்சி

முக்கியப் பிரிவான மின்னணுப் பொருள்கள் பிரிவில்தான் ஆக அதிக வளர்ச்சி பதிவானது. அப்பிரிவில் மே மாதம் 35.8 விழுக்காடு வளர்ச்சி பதிவானது. ஏப்ரலில் அவ்விகிதம் 40.3 விழுக்காடாக இருந்தது.

துல்லியப் பொறியியல் பிரிவில் மே மாதம் ஆண்டு அடிப்படையில் இரண்டாவது ஆக அதிக வளர்ச்சி பதிவானது. அப்பிரிவு 32.2 விழுக்காடு வளர்ச்சிகண்டது. அந்தப் பிரிவினுள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கான பிரிவில் (machinery and systems) 38.9 விழுக்காடு வளர்ச்சி பதிவானது.

பொது உற்பத்திப் பிரிவில் வளர்ச்சி குறைவாக 1.8 விழுக்காடாகப் பதிவானது. உணவு, பானத் துறை, புகையிலைத் துறை உள்ளிட்டவற்றில் காணப்பட்ட வளர்ச்சி அதற்கு முக்கியக் காரணமாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உற்பத்திஆலை