2025 பொதுத் தேர்தல் மாற்று வேட்பாளர்களை தெம்பனிஸ், பொங்கோலில் களமிறக்கும் மசெக

2025 பொதுத் தேர்தல் மாற்று வேட்பாளர்களை தெம்பனிஸ், பொங்கோலில் களமிறக்கும் மசெக

2 mins read
27d5ddfd-7c35-4c1c-8e30-b09c016f1c10
2025 மக்கள் செயல் கட்சி மாநாட்டில் உரையாற்றும் திரு அகமது பிர்தவுஸ் தாவூத். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2
Google News Preferred Icon

2025 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாற்று வேட்பாளர்களாக இருந்த இருவர், தேர்தல் முடிந்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், தற்போது தெம்பனிசிலும் பொங்கோலிலும் தங்களது களப்பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

நிறுவன வழக்கறிஞரான அகமது பிர்தவுஸ் தாவூத், இதற்கு முன் நீ சூன் குழுத்தொகுதியில் தொண்டூழியராகப் பணியாற்றியவர். இவர் தற்போது பொங்கோல் நார்த் மசெக கிளையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல, தொழில்முனைவரான முஸ்தஃபா கமால், தெம்பனிஸ் சென்ட்ரல் கிளையில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் முன்னதாக ஜூ சியாட்டில் தொண்டூழியராகச் செயலாற்றியவர்.

இவ்விருவரும் 2025 பிற்பகுதியிலிருந்து அந்தந்தக் குழுத்தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்கள் சந்திப்பு அமர்வுகளிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளனர்.

2030க்குள் நடைபெறவுள்ள அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மக்களிடையே அறிமுகத்தை ஏற்படுத்தவும் இவர்கள் முன்கூட்டியே களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தைக் கைவிட்டு, தகுதியானவர்களை முன்கூட்டியே மக்களிடம் கொண்டு செல்லும் கட்சியின் வியூக மாற்றத்தையும் இது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் முன்கூட்டியே களமிறங்குவது, அவர்கள் அனுபவம் பெறுவதற்கும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றத் தகுதியானவர்களா என்பதை மக்களும் கட்சியும் மதிப்பீடு செய்வதற்கும் உதவும் என்று 2025 ஜூலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் மசெக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, வேட்பாளர் பட்டியலுடன் திரு ஃபிர்தவுஸ், 42, திரு முஸ்தஃபா, 41, இருவரையும் மாற்று வேட்பாளர்களாக அறிவித்திருந்தது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்று, தேர்தலில் போட்டியிடாத மூவரில் இவர்கள் இருவரும் அடங்குவர். மூன்றாவதாக இடம்பெற்ற தொழிற்சங்கவாதி நடாஷா சோய், இதுவரை களப்பணிகளில் காணப்படவில்லை என்றாலும், 2026 ஜனவரியில் கல்வி அமைச்சரும் மசெக தலைவருமான திரு டெஸ்மண்ட் லீயுடன் சீனாவுக்கான கட்சிப் பயணத்தில் இடம்பெற்றிருந்தார்.

தெம்பனிஸ், பொங்கோல் இரு தொகுதிகள் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த தேர்தலில் பாட்டாளிக் கட்சியுடன் கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதிகளில் மசெக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.

குறிப்பாக, தெம்பனிசில் மசெகவுக்குக் கடும் சவாலை அளித்த பாட்டாளிக் கட்சியின் ஐலீன் சோங், தற்போது தொகுதியல்லாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மாறிவரும் அரசியல் சூழலில், அடுத்த தேர்தலில் ஏற்படக்கூடிய கடும் போட்டியைச் சமாளிக்க, திரு ஃபிர்தவுஸ், திரு முஸ்தஃபா போன்றோர் இப்போதிலிருந்தே மக்களிடையே தங்களை நிலைநிறுத்திக்கொள்வது கட்சிக்கு வலுசேர்க்கும் என்று அரசியல் ஆய்வாளர் ஃபெலிக்ஸ் டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்