ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 3 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காட்டுக்கு இடைப்பட்டிருக்கும் என முன்னுரைப்பு

சிறிய போனஸ் தொகையை வழங்க திட்டமிடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
a62ef1c4-6f5c-4fe1-b98d-a1cac72bedc1
தற்போதுள்ள நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்கள் மூன்றிலிருந்து ஆறு விழுக்காடு வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பளம் 2026ஆம் ஆண்டில் மூன்றிலிருந்து ஆறு விழுக்காடு வரை உயரக்கூடும் என்று பல்வேறு மனிதவள நிறுவனங்கள் நடத்திய அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொருளியல் நிச்சயமற்ற சூழல் காரணமாக இந்த ஆண்டு முன்னுரைப்பைப் போல அடுத்த ஆண்டும் சம்பள விவகாரத்தில் நிறுவனங்கள் தொடர்ந்து கவனத்துடன் இருப்பதாக மனிதவள நிறுவனங்கள் குறிப்பிட்டன.

எனினும் நிறுவனங்கள் சம்பளத்தைச் சிறிதளவில் கூட்டிக் கொடுப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவை தெரிவித்தன.

“பெரும்பாலான முதலாளிகள் சிறிய சம்பள உயர்வையும் சிறிய போனஸ் தொகைகளையும் கொடுக்க முன்வருவதைக் காண முடிகிறது,” என்றார் மேன்பவர் குரூப் சிங்கப்பூர் திறன் நிறுவனத்தின் நிர்வாகி லின்டா டியோ.

மேன்பவர் குரூப் நடத்திய அண்மைய வருடாந்தர சம்பள, போனஸ் திட்ட ஆய்வில் 21 விழுக்காட்டு முதலாளிகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவாகச் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்தது.

கடந்த ஆண்டு அது 18 விழுக்காடாக இருந்தது.

அதேவேளை, 23 விழுக்காடு முதலாளிகள் 5 விழுக்காட்டுக்கும் அதிகமாக சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு அது 26 விழுக்காடாக இருந்தது.

மேன்பவர் குரூப் நிறுவனம் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட முதலாளிகளிடம் கடந்த அக்டோபர் மாதம் கருத்தாய்வு நடத்தியது.

ஏஒன், பெர்சொல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4.3 விழுக்காடு சம்பள உயர்வை அடுத்த ஆண்டு கொடுக்க முற்படுவதாகத் தெரிகிறது. இந்த ஆண்டும் அதே போன்ற சம்பள உயர்வை ஊழியர்கள் பெற்றனர்.

இதற்கிடையே, அனைத்துலகத் திறனாளர் நிறுவனமான ரோபர்ட் வால்டர்ஸ், தற்போதுள்ள நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்கள் மூன்றிலிருந்து ஆறு விழுக்காடு வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு முன்னுரைக்கப்பட்ட இரண்டிலிருந்து ஐந்து விழுக்காட்டைவிட அது அதிகம்.

ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் நிறுவனங்கள் கவனத்துடன் செயல்பட்டாலும் அவர்களைத் தக்கவைக்க நல்ல சம்பளங்களை வழங்குவது அவசியம் என்பதை உணர்ந்திருப்பதாகக் கருத்தாய்வு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்