கிழக்கு ஆப்பிரிக்காவின் 8 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை எட்ட சிங்கப்பூர் முயற்சி

கிழக்கு ஆப்பிரிக்காவின் 8 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டை எட்ட சிங்கப்பூர் முயற்சி

2 mins read
9f31924e-7dc3-41fb-ba2f-a0304cbe494e
அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்குத் தான்சானியாவில் அளிக்கப்பட்ட வரவேற்புச் சடங்கில் அவருடன் அந்நாட்டு அதிபர் சாமியா சுலுஹு ஹசன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எட்டு நாடுகளைக் கொண்ட வட்டார அமைப்புடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ளச் சிங்கப்பூர் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

ஆப்பிரிக்கத் தரப்பு ஒன்றுடன் செய்துகொள்ளப்படும் அத்தகைய முதல் உடன்பாடாக அது இருக்கும்.

கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம் அந்த உடன்பாட்டைச் செய்துகொள்வதில் முனைப்புடன் இருப்பதைச் சிங்கப்பூர் வரவேற்பதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கும் வளர்ச்சிக்கான புதிய துறைகளை அடையாளம் காணவும் அது வழிவிடும் என்றார் அவர்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே அந்த வட்டாரத் தரப்பு செய்துகொள்ளவிருக்கும் முதல் தடையற்ற வர்த்தக உடன்பாடும் அதுவே.

தான்சானியாவின் அதிபர் சாமியா சுலுஹு ஹசனுடன் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் தர்மன் பேசினார்.

சிங்கப்பூர் அதிபர், தான்சானியாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதன்கிழமை வரை அங்கிருப்பார்.

தடையற்ற வர்த்தக உடன்பாடு முக்கியப் படிக்கல் என்றார் அதிபர் தர்மன். சிங்கப்பூரைத் தான்சானியாவுடன் மட்டுமன்றி மற்ற ஏழு நாடுகளுடனும் அது இணைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, ருவாண்டா, சோமாலியா, தென்சூடான், உகாண்டா ஆகியவையே அந்த ஏழு நாடுகள்.

“உலகளாவிய நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் நம் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்தக் கிழக்கு ஆசியச் சமூக, சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கும்,” என்றார் அதிபர் தர்மன்.

கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், மிகப் பெரிய ஆசியான் சந்தைக்குள் நுழைவதற்கான வாயிலாகச் சிங்கப்பூர் திகழமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு ஆசிய வட்டாரத்துடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டின்வழி சிங்கப்பூர், ஒத்துழைப்பை மேம்படுத்த முன்வந்திருப்பதைத் தான்சானியாவின் அதிபர் ஹசன் வரவேற்றார்.

தான்சானியாவில் கல்வி, திறன் வளர்ச்சி, புத்தாக்கம், மின்னிலக்கப் பொருளியல் முதலியவற்றில் இளையர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் சிங்கப்பூருடன் ஒத்துழைக்க விரும்புவதாக அவர் சொன்னார்.

தான்சானியாவில் தூதரகம் அமைக்க வருமாறு சிங்கப்பூருக்கு அதிபர் ஹசன் அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூர் அதிபர் ஒருவர் அந்நாட்டுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறை. இருநாடுகளுக்கும் இடையில் அரசதந்திர உறவு தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதிபர் தர்மன் அங்குச் சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்