சிங்கப்பூரும் சீனாவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க வழிவிடும் எட்டு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன. பசுமை மேம்பாடு, மின்னிலக்கப் பொருளியல், கடல்துறை இணைப்பு முதலியவை அவற்றுள் சில.
சீனப் பிரதமர் லி சியாங், சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் வருகையின் முதல் நாளான சனிக்கிழமை (அக்டோபர் 25) இதற்கான புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.
நாடாளுமன்ற இல்லத்தில் சீனப் பிரதமருக்குச் சடங்குபூர்வ வரவேற்பு நல்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளின் பேராளர்களும் சந்தித்துப் பேசினர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் தொடக்கவுரையில், அண்மையில் சீனா சென்றபோது தமக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் உபசரிப்பை நினைவுகூர்ந்தார். அதனை இப்போது சீனப் பிரதமருக்குத் திருப்பிச் செலுத்துவதில் அகமகிழ்வதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
“இரு நாடுகளும் 35 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் நல்ல நேரத்தில் நீங்கள் வருகை புரிந்திருக்கிறீர்கள். நாடுகளின் வரலாற்றில் 35 ஆண்டு என்பது நீண்டகாலம் அன்று. ஆனாலும் கடந்த 35 ஆண்டுகளில் நமது இரு நாடுகளிலும் நமது வட்டாரத்திலும் பேரளவில் மாற்றங்களும் உருமாற்றங்களும் இடம்பெற்றுள்ளன,” என்றார் திரு வோங்.
“35 ஆண்டுகளாக இரு தரப்பு உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. நட்புறவு ஆழமாகியுள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது,” என்று அவர் சொன்னார்.
திரு லி உரையாற்றியபோது, சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளான நிலையில் நாடு பல்வேறு துறைகளில் படைத்துள்ள சாதனைகளைப் பார்க்கமுடிந்ததாகக் குறிப்பிட்டார்.
சீனா, சிங்கப்பூருடன் கொண்டுள்ள அரசதந்திரத் தொடர்புகளையும் நட்புறவையும் கட்டிக்காக்கத் தொடர்ந்து அதனோடு இணைந்து பணியாற்றும் என்றார் திரு லி. இரு நாடுகளும் வளர்ச்சி காண்பதில் உதவச் சீனா ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நெருக்கடிகால நிர்வாகம், உணவுப் பாதுகாப்பு, தகவல், தொடர்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்கவும் இணக்கம் காணப்பட்டது.
சிங்கப்பூரும் சீனாவும் அவற்றுக்கு இடையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள்களையும் மின்னிலக்கத் தீர்வுகளையும் பயன்படுத்துகின்ற கப்பல் பாதைகளை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளன.
சிங்கப்பூர்-சீனா பசுமை, மின்னிலக்கக் கப்பல் பாதைப் புரிந்துணர்வுக் குறிப்பின்படி, இரு நாடுகளும் கடல்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றும். கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், துறைமுக, விநியோக நடவடிக்கைகளை மேலும் சிறந்த முறையில் மேற்கொள்ளவும் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, தரநிலைகள் முதலியவற்றை உருவாக்கவும் அது வகைசெய்யும்.
ஏற்கெனவே அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா முதலிய நாடுகளுடன் அத்தகைய கப்பல் பாதைகளை நிறுவும் உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது சிங்கப்பூர்.

