சிங்கப்பூரில் அரசு அதிகாரிபோல வேடமிட்டு மோசடி: 36 வயது மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் அரசு அதிகாரிபோல வேடமிட்டு மோசடி: 36 வயது மலேசிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
ea3629e2-94c7-4bdb-af26-b68040bd1e31
காவல்துறை, சந்தேக நபரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றது. - படம் : காமினி ஹஷ்வின்
Google News Preferred Icon

அரசு அதிகாரிபோல வேடமிட்டு பல மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது மலேசிய ஆடவர் மீது ஜனவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாண்டு ஜனவரி 5ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த விசாரணை தொடங்கப்பட்டது.

அந்தப் பெண் சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட சிலரிடம் $12,000க்கும் அதிகமான ரொக்கத்தையும் வேறுசில விலையுயர்ந்த பொருள்களையும் இழந்தார்.

அப்பெண் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பொய்யாகக் கூறி மிரட்டிய அக்கும்பல், விசாரணைக்காக அவரது பணம், மதிப்புமிக்க பொருள்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.

ஜனவரி 26ஆம் தேதி, இதன் தொடர்பில் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தபோது, பாதிக்கப்பட்ட மற்றொருவருக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற பொருள்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நபர் அனைத்துலக மோசடிக் கும்பலுக்கு உடந்தையாக இருந்து உதவியதாக நம்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம். கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடப்புக்கு வந்த புதிய விதிமுறையின்கீழ் குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படக்கூடும்.

அரசு அதிகாரிகள் ஒருபோதும் தொலைபேசி வழியாகப் பணம் கேட்க மாட்டார்கள் என்றும் அதிகாரபூர்வமற்ற செயலிகளைப் பதிவிறக்கும்படிச் சொல்லமாட்டார்கள் என்றும் காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

சந்தேக நபரைத் திங்கட்கிழமை (பிப்ரவரி 2), மோசடி நடந்த 44 பீயோ கிரசென்ட் பகுதிக்குக் காவல்துறை அழைத்துச்சென்றது.

குறிப்புச் சொற்கள்