சிம் அட்டை முறைகேடு: நால்வர்மீது குற்றச்சாட்டு

சிம் அட்டை முறைகேடு: நால்வர்மீது குற்றச்சாட்டு

1 mins read
0fcc7462-f49c-4f58-974c-83df8f93e09f
துவாசில் ஜூன் 4ஆம் தேதி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஆடவர் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

குற்றவியல் நடவடிக்கைகளுக்காக மோசடியாக சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்ததில் தொடர்பிருப்பதாகக் கூறி, நால்வர்மீது சனிக்கிழமை (ஜூன் 6) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் 26 முதல் 38 வயதிற்குட்பட்டவர்கள்.

துவாசில் வியாழக்கிழமை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஆடவர் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மோசடியாகப் பின்செலுத்துகை (போஸ்ட்பெய்டு) சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்யும் சில்லறை விற்பனையாளர்களைக் குறிவைத்து அதிகாரிகளின் நடவடிக்கை இடம்பெற்றது. அந்த சிம் அட்டைகளைப் பின்னர் வெளிநாடுகளில் உள்ள குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

கூடுதல் பின்செலுத்துகை சிம் அட்டைகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தியதாக 34 வயது ஆடவர்மீதும் பெண்கள் இருவர்மீதும் காவல்துறை சந்தேகப்படுகிறது. அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்கள் ஆள்மாறாட்ட மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

கைதுசெய்யப்பட்டோரில் நான்காவது ஆளான 26 வயது ஆடவர்க்கும் அவ்வாறு செய்வது எப்படி எனக் கற்றுக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, 30 முதல் 65 வயதிற்குட்பட்ட மேலும் மூன்று ஆடவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

குற்றச் செயல்களுக்கு ஏதுவாக மோசடிப் பதிவுமூலம் சிம் அட்டை பெறுவதற்குத் துணைபோன குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிக்கு $10,000 வரை அபராதம், மூவாண்டுகள்வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்