சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையத்துக்கு (Western Sydney International Airport) அன்றாடம் நேரடிப் பயணச் சேவைகளை வழங்கவுள்ளது.
விதிமுறைகளின்படி ஒப்புதல் அளிக்கப்படுவதைப் பொறுத்து வரும் நவம்பர் மாதம் 23ஆம் தேதியிலிருந்து அச்சேவை தொடங்கும் என்று அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அறிக்கை மூலம் தெரிவித்தது.
இந்தப் புதிய பயணப் பாதைக்கான விமான பயணச்சீட்டுகள் புதன்கிழமை (மார்ச் 25) முதல் கட்டங்கட்டமாக விற்பனைக்கு விடப்படும்.
சிங்கப்பூர்-மேற்கு சிட்னி விமானச் சேவை சாங்கி விமான நிலையத்திலிருந்து தினமும் காலை 11.30 மணியளவில் புறப்படும். பிறகு மேற்கு சிட்னியிலிருந்து சிங்கப்பூர் வரும் எஸ்ஐஏ விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11.55 மணிக்குப் புறப்படும்.
சிங்கப்பூர்-மேற்கு சிட்னி பயண நேரம் 7.5லிருந்து 8.5 மணிநேரத்துக்கு இடைப்பட்டிருக்கும்.
இப்பயணப் பாதைக்கு எஸ்ஐஏ, நடுநிலை தூரம் கொண்ட பயணங்களுக்காக அதன் ஏர்பஸ் ஏ350-900 வகை விமானங்களைப் பயன்படுத்தும். அவ்விமானத்தில் மொத்தம் 303 இருக்கைகள் உள்ளன.
தற்போது சிங்கப்பூரிலிருந்து சிட்னியின் கிங்ஸ்போர்ட் ஸ்மித் அனைத்துலக விமான நிலையத்துக்கு எஸ்ஐஏ தினமும் நான்கு சேவைகளை இயக்கி வருகிறது.
புதிய சேவையுடன் சேர்த்து இனி எஸ்ஐஏ சிங்கப்பூரிலிருந்து சிட்னிக்கு தினமும் ஐந்து சேவைகளை வழங்கும்.

