எஸ்ஐஏ விமானச் சேவை தாமதம்: இரு நகரங்களில் 2 நாள் சிக்கிய 380 பயணிகள்

2 mins read
0ce835c9-46cb-418e-b34f-cad7841d16f5
பயணப் பைகளைக் கையாளும் கட்டமைப்பில் பிரச்சினை உண்டானதாலும் தொழில்நுட்பக் கோளாற்றாலும் நூவார்க்கில் விமானச் சேவை இரண்டு முறை தாமதமடைந்தது. - படங்கள்: அவினா‌‌ஷ் ரெட்டி

நியூயார்க்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) பயணிகள் கிட்டத்தட்ட 380 பேர், விமானச் சேவைகள் தாமதமடைந்ததால் நியூயார்க்கிலும் இஸ்தான்புல்லிலும் இரண்டு நாள் சிக்கிக்கொள்ள நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையாலும் தொழில்நுட்பக் கோளாற்றாலும் சிங்கப்பூருக்கான விமானச் சேவைகள் இரண்டு முறை ஒத்திப்போடப்பட்டன.

விமானச் சேவைகளின் தாமதம் குறித்துச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) எஸ்ஐஏ தகவல் அளித்தது. விமானச் சேவை எண் SQ21, நியூயார்க்கில் உள்ள நூவார்க் லிபெர்ட்டி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி காலை மணி 9.35க்குப் (சிங்கப்பூரில் இரவு மணி 10.35) புறப்படுவதாக இருந்தது.

இருப்பினும் மோசமான வானிலையாலும் பனிக்கட்டிகளை அகற்றுவதற்காக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாலும் அது தாமதமடைந்தது.

அமெரிக்காவில் இது பனி பொழியும் பருவம். ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் ஏறக்குறைய 500 விமானச் சேவைகள் தாமதமாயின. 200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

விமானத்தில் இருந்து இறங்கிய 151 பயணிகளுக்கும் உணவுப் பற்றுச்சீட்டுகளுடன் இரவு ஹோட்டலில் தங்குவதற்கு வசதியும் செய்துதரப்பட்டதாக நியூஜெர்சியின் நியூஸ் 12 ஊடகம் தெரிவித்தது.

பின்னர் விமானச் சேவை எண், SQ9021 என்று மாற்றப்பட்டது. அது திங்கட்கிழமை (டிசம்பர் 15) உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 12.35க்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுவும் தாமதமடைந்தது. பயணப் பைகளைக் கையாளும் கட்டமைப்பில் பிரச்சினை உண்டானதாலும் தொழில்நுட்பக் கோளாற்றாலும் இம்முறை பயணம் தள்ளிப்போடப்பட்டதாக எஸ்ஐஏ கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்குக் கூடுதல் உணவுப் பற்றுச்சீட்டுகளுடன் இரவு தங்குவதற்கு ஹோட்டல் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டதாக நிறுவனம் சொன்னது. இயன்றவரை பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலரை வேறு விமானச் சேவைகளுக்கு மாற்றிவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.

விமானச் சேவை எண் SQ9021, டிசம்பர் 16ஆம் தேதி நூவார்க்கில் உள்ளூர் நேரப்படி காலை மணி 9.35க்குப் புறப்பட்டு, டிசம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூரில் மாலை மணி 4.40க்குத் தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொரு நடப்பில், டிசம்பர் 12ஆம் தேதி இஸ்தான்புல்லிலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.15 மணிக்குச் (சிங்கப்பூரில் மாலை 6.15 மணி) சிங்கப்பூருக்குப் புறப்பட வேண்டிய விமானச் சேவை எண் SQ391, தொழில்நுட்பக் கோளாற்றால் தாமதமடைந்தது.

விமானத்தில் இருந்த 229 பயணிகளுக்கும் உணவும் பானமும் வழங்கப்பட்டன. இருப்பினும் பின்னர் விமானத்தின் உதிரி பாகத்தைப் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் பழுதுபார்க்கக் கூடுதல் நேரமும் ஆதரவும் தேவைப்பட்டது.

பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதோடு இரவு ஹோட்டலில் தங்குவதற்கு வசதியும் ஏற்பாடு செய்துதரப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.

அந்த விமானச் சேவையின் எண், SQ9391 என்று மாற்றப்பட்டு, இஸ்தான்புல்லிலிருந்து டிசம்பர் 14ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு விமானம் புறப்பட்டது. அதே நாள் இரவு மணி 7.14க்கு அது சிங்கப்பூர் வந்தடைந்தது.

குறிப்புச் சொற்கள்