எரிபொருள் விலை ஏற்றத்திலும் விமானக் கட்டண விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க எஸ்ஐஏ முடிவு

சேவைகளை அதிகரித்து பயணிகளை கவரும் எஸ்ஐஏ

எரிபொருள் விலை ஏற்றத்திலும் விமானக் கட்டண விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க எஸ்ஐஏ முடிவு

2 mins read
6503b545-8497-41c4-8cef-11e2ff0c922e
ஈரான் போர், உலகளாவிய சூழலால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ள போதிலும் விமானக் கட்டண உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போவதாக எஸ்ஐஏ தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

உலகளவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரித்துள்ள போதிலும், அந்தச் சுமை முழுவதையும் பயணிகள் மீது திணிக்கப்போவதில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (மே 15) நடைபெற்ற ஆண்டு நிதிநிலைக்கூட்டத்தில் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி லீ லிக் ஹிசின் இதனை உறுதிப்படுத்தினார்.

ஈரான் போர், உலகளாவிய சூழலால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது.

எனினும், தேவையைவிடக் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகளை இழக்க நேரிடும் என்பதால், சந்தைப் போட்டிக்கு ஏற்ப நியாயமான விலையிலேயே விமானக் கட்டணம் இருக்கும் என்று திரு லீ தெரிவித்தார்.

“வாடிக்கையாளர்களின் நலனை முன்னிறுத்தியே நிறுவனத்தின் வணிக இலக்குகள் அமையும்,” என்றார் அவர்.

மற்ற விமான நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்து வரும் வேளையில், எஸ்ஐஏ ஐரோப்பாவிற்கான விமானச் சேவைகளை 13 விழுக்காடு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, லண்டன் கேட்விக், மியூனிக் ஆகிய நகரங்களுக்கான கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் வழியாகப் பயணம் செய்ய விரும்பாத பயணிகளைக் கவர இது ஒரு வாய்ப்பாக அமையும் என நிறுவனம் கருதுகிறது.

மேலும், 2026ஆம் ஆண்டு முதல் நீண்டதூர விமானங்களில் புதிய தலைமுறை இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட ‘கிரிஸ்வேர்ல்ட்’ பொழுதுபோக்கு அம்சங்கள், புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தவும் எஸ்ஐஏ திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ‘ஜார்விஸ்’ போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து எஸ்ஐஏ நிறுவனப் பங்கு 2 விழுக்காடு உயர்ந்து $6.42 ஆக நிலைபெற்றது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்எஸ்ஐஏநிதிநிலைகூட்டம்விமானப் பயணம்கட்டணம்உயர்வு