பணத்தாசை காட்டி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: உடற்குறையுள்ள முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

பணத்தாசை காட்டி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: உடற்குறையுள்ள முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

2 mins read
4dbee681-f2f0-4940-9c9b-9fb791b2fdb4
பணம், சிகரெட் கொடுத்து 12 வயது சிறுவனுக்கு தொடர் பாலியல் தொல்லை இழைத்த உடற்குறையுள்ள முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

பணம், சிகரெட் கொடுத்து 12 வயது சிறுவனுக்குத் தொடர் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில், இரு கால்களும் துண்டிக்கப்பட்ட 66 வயது முதியவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 12 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தீர்ப்பளித்துள்ளது.

அப்துல் ரஹீம் சாத் என்ற அந்த நபர், கடந்த 2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 16 வயது ஆகும் வரை இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ரஹீம், தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பனைப் பார்க்கச் சென்றபோது, ரஹீம் அச்சிறுவனிடம் பேச்சுக்கொடுத்துப் பழகியுள்ளார்.

பின்னர் சிறுவனுக்குச் சிகரெட், பணத்தாசை காட்டி, அருகில் உள்ள சமூக மையத்தின் உடற்குறையுள்ளோர் கழிவறைக்கு அழைத்துச் சென்று இந்தச் செயல்களில் ரஹீம் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவரின் இந்த நடத்தை குறித்து அவரது உறவினர் பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த 2024 ஜனவரியில் காவல்துறை ரஹீமைக் கைது செய்தனர்.

தண்டனை விவரங்களை இறுதி செய்யும்போது, பாதிக்கப்பட்ட அதே சிறுவனுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும்பாலான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட மற்ற 14 குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தால் கருத்தில் கொள்ளப்பட்டன.

நாட்டின் சட்டப்படி 50 வயதைத் தாண்டிய குற்றவாளிகளுக்குப் பிரம்படி தண்டனை வழங்க முடியாது என்பதால், அதற்கு மாற்றாகக் கூடுதல் சிறைத் தண்டனை சேர்க்கப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தண்டனைபாலியல் குற்றம்