ஏழு உள்ளூர் காய்கறிப் பண்ணைகள், பாசிர் பாஞ்சாங் ஒட்டுமொத்த விற்பனை நிலையத்தில் இருக்கும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
அந்தப் பண்ணைகளில் விளையும் காய்கறிகளை கூடுதலானோருக்கு விநியோகிப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும். குறிப்பாக, உணவுச் சேவை வழங்குவோர், உணவு உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு உணவு விநியோகிப்பதற்கு இது பொருந்தும்.
சம்பந்தப்பட்ட ஏழு நகர்ப்புறப் பண்ணைகள், சிங்கப்பூர் வேளாண் உணவு நிறுவனங்கள் சம்மேளனத்தின்கீழ் (சேஃப்எஃப்) இயங்குபவையாகும். அந்த ஏழு பண்ணைகளில் யிலி, மியோட், (MEOD) மெட்ரோ, லைட்லீஃப், கிராப்சிட்டி உள்ளிட்டவை அடங்கும்.
ஒப்பந்தத்தின்கீழ் ஏற்பாடு
ஒப்பந்தத்தின்படி, லிம் தியாம் சுவீ ஃபூட் சப்ளையர், தோங் ஹாய், சிசிஎல் இம்பெக்ஸ் ஆகிய ஒட்டுமொத்த விற்பனை நிறவனங்கள் உள்ளூரில் வளர்க்கப்பட்ட காய்கறி வகைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும். விமானங்களில் உணவு வழங்கும் சேட்ஸ், பெரிய மத்திய சமையற்கூடங்கள் (large central kitchens) உள்ளிட்டவை அந்த வாடிக்கையாளர்களில் அடங்கும்.
ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு வார நாளிலும் 600 கிலோகிராம் வரையிலான உள்ளூர்க் காய்கறி வகைகளை விற்பது இலக்கு என்று சிங்கப்பூர் வேளாண் உணவு நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி கென் சியோங் தெரிவித்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தானபோது பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது, “போதுமான தேவை எழும்போது விளைச்சலை அதிகரிப்பதற்கான நம்பிக்கை நமது விவசாயிகளுக்கு வரும்,” என்றார்.
“இதற்குத் தொடர்ந்து வரவேற்பு இருந்தால் காலப்போக்கில் சேவைகள் கட்டுப்படியான விலையில் அமையும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்,” என்று சிங்கப்பூர் வேளாண் உணவு நிறுவனங்கள் சம்மேளனத்தின் புரவலருமான திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
மூவாண்டு முயற்சி
இதுபோன்ற ஏற்பாட்டுக்கு ஒட்டுமொத்த விற்பனையாளர்களைச் சம்மதிக்க வைக்க மூவாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் பொதுவாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களைத்தான் விரும்புவர்.


